ஆழ்தியான செபவாழ்வுடன் கல்விப்பணியில் அகுஸ்தீனார் துறவுசபை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இஸ்பெயின் நாட்டின் Talavera de la Reinaவிலுள்ள அகுஸ்தீனார் பெண்துறவியர் இல்லம் துவக்கப்பட்டதன் 450ஆம் ஆண்டையொட்டி அத்துறவு இல்லத்தோடு தொடர்புடையவர்கள் குழுவை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 7ஆம் தேதி, வியாழனன்று இவர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, கடந்த ஆண்டே துவங்கியுள்ள இந்த 450ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் தற்போது தன்னுடனான சந்திப்புடன் முடிவுக்கு வருகின்றன என உரைத்ததுடன், ஆழ் தியான செபவாழ்வை மேற்கொண்டுவரும் Talavera de la Reina அகுஸ்தீனார் துறவுசபை, கல்விப்பணியிலும் ஈடுபட்டுவருவது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.
இறைவேண்டலுக்கென சிறப்பான விதத்தில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டில், இறைவனிடமிருந்தே அனைத்து சேவைகளும் பிறக்கின்றன என்பதற்கும், சேவை மற்றும் அப்போஸ்தலிக்கப் பணிக்கும் இந்த அகுஸ்தினார் துறவு சபை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது எனவும் கூறினார் திருத்தந்தை.
Talavera de la Reina அகுஸ்தீனார் துறவியர் இல்லத்தின் பெண்துறவியர் உள்மன வாழ்வு, மற்றும் இறைவேண்டல் கலையின் ஆசிரியர்கள் என்பதாக இருந்து தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கும் இறைவனோடு உரையாடுவதையும், அவருக்கு செவிமடுப்பதையும், அவரின் பிரசன்னத்தையும் உணர உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இஸ்பெயினின் Talavera de la Reina என்னுமிடத்தில் 1573ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி, அகுஸ்தீனார் துறவி புனித Alonso de Orozco மற்றும் அவரது சகோதரி பிரான்செஸ்கா என்பவர்களால் இந்த அகுஸ்தீனார் பெண் துறவியர் இல்லம் துவக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்