பிறர்மீது கொண்டுள்ள அக்கறை எப்போதும் நம்மில் வளரவேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
FADICA கத்தோலிக்க வலையமைப்பானது தனிப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்கள் மீதான இரக்கப் பார்வை, அர்ப்பண உணர்வு, ஒத்துழைப்பு ஆகியவற்றை இயல்பாகக் கொண்ட ஒருங்கிணைந்த பயணமாக இயங்குகின்றது என்றும், பிறர்மீது கொண்டுள்ள தாராளமான இந்த அக்கறையானது எப்போதும் நம்மில் வளரவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 11 திங்கள்கிழமை வத்திக்கானில் கத்தோலிக்க நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு உதவும் FADICA எனப்படும் கத்தோலிக்க வலையமைப்பின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 55 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிறரன்பு செயல்கள் ஆற்றுவதற்கான ஆவியின் ஆற்றலானது இறைவன் நமக்கு அளித்திருக்கின்ற ஏராளமான கொடைகளுக்கான நன்றி உணர்வாலும், அவருடைய அன்பின் அனுபவத்தாலும் வளர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
அன்பு எப்போதும் நம்மை மாற்றுகின்றது, நமது செயல்களை மாற்றுகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அன்பினால் எல்லா செயல்களும் செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இயேசுவின் இத்தகைய அன்பானது நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் நிலைத்து நின்று வளர வேண்டும் என்றும், நம்மிலிருந்து வெளிநோக்கிச் சென்று பலன் தர வேண்டும் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கத்தோலிக்க வலையமைப்பின் உறுப்பினர்களும் அவர்களும் குடும்பத்தாரும் கிறிஸ்துவின் அன்பைப் பிறருக்கு எடுத்துரைக்கக்கூடியவர்களாக மகிழ்வுடன் வாழவும் வலியுறுத்தினார்.
திருஅவை மீதான அன்பு, நற்செய்தியைப் பரப்புதல், கிறிஸ்துவின் அரசுக்கு ஆற்றும் பணி, நீதி, தூய்மை, அமைதி கொண்ட தூய அரசிற்காக உழைக்கும் கத்தோலிக்க வலையமைப்பின் பணிகளைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்காக செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்