திருத்தந்தையின் டிசம்பர்-ஜனவரி முக்கிய நிகழ்வுகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
2024 டிசம்பர் மற்றும் 2025 ஜனவரி மாதங்களுக்கான திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
பிரான்ஸ் நாட்டு தீவான கோர்சிகாவில் 'மத்தியதரைக் கடலின் பிரபல மத பாரம்பரியங்கள்' என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள கருத்தங்கின் இறுதி நாள் நிகழ்வில் பங்குபெறும் நோக்கத்துடன் Ajaccio நகருக்கு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஒரு நாள் திருப்பயணம் மேற்கொள்ள உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டி டிசம்பர் 24ஆம் தேதி முன்னிரவு உள்ளூர் நேரம் 7 மணிக்கு அதாவது இந்திய நேரம் இரவு 11 மணி 30 நிமிடங்களுக்கு புனித பேதுரு பெருங்கோவிலின் புனிதக்கதவை திறந்து வைத்து கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுவார். அத்திருப்பலியுடன் திருஅவையின் யூபிலி ஆண்டு துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
25ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் மேல்மாடி பகுதியில் நின்று ஊருக்கும் உலகுக்கும் என பொருள்படும் ஊர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தியையும் வழங்குவார் திருத்தந்தை.
கத்தோலிக்கத் திருஅவையின் முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவானின் திருவிழாவான டிசம்பர் 26ஆம் தேதியன்று, காலை உள்ளூர் நேரம் 9 மணிக்கு உரோம் நகரில் உள்ள ரெபிபியா சிறைக்குச் சென்று அங்குள்ள கோவிலில் புனிதக் கதவை திறந்து வைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி அன்று மாலை உரோம் நேரம் 5 மணிக்கு Te Deum நன்றி வழிபாட்டை தலைமை தாங்கி நடத்துவார்.
2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி உரோம் நேரம் காலை 10 மணிக்கு இறைவனின் தாய் மரியன்னை திருவிழா திருப்பலியை சிறப்பிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ். இது 58வது உலக அமைதி தினமாகும்.
ஜனவரி 6ஆம் தேதி காலை 10 மணிக்கு திருக்காட்சி திருவிழா திருப்பலியை புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றுவதுடன், 12ஆம் தேதி இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவன்று வத்திக்கானின் சிக்ஸ்டைன் சிற்றாலயத்தில் சில குழந்தைகளுக்கு திருமுழுக்கும் வழங்குவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்