இத்தாலியின் கலாப்ரியாவிலுள்ள வீடற்ற மக்களுக்குத் திருத்தந்தை உதவி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 27 இப்புதனன்று, இத்தாலிய நகரங்களான உரோம், ஜெனோவா, தூரின், நேபிள்ஸ் மற்றும் கத்தானியாவில் திருத்தந்தையின் பிறரன்பு அமைப்பின் உதவிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழில்துறை பகுதியான ரெஜ்ஜியோ கலாப்ரியாவிற்கும் அவ்வுதவிகள் வந்தடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்கள், பசியால் இறக்காமல், கண்ணுக்குத் தெரியாததால் இறக்கும் மக்களின் மாண்பை மீட்டெடுக்க இது ஒரு வழியை வழங்குகிறது என்று கூறியுள்ளார்.
“நான் அங்குச் சென்றபோது, அவர்களிடம், ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நாங்கள் கண்டுகொள்ளப்பட வேண்டும்!'' என்று கூறினர் என்று விவிரித்தார் கர்தினால் Krajewski.
மேலும் ‘நாங்கள் இங்குப் பல ஆண்டுகளாக வாழ்கிறோம். எங்களுக்கு ஆவணங்கள் தேவை. தானியங்கி மிதிவண்டிகளில் கூட உரிமத் தகடுகள் உள்ளன, ஆனால் மனிதர்களாகிய எங்களிடம் எதுவும் இல்லை என்று ஓர் இளைஞன் என் கண்ணைப் பார்த்து சொன்னான் என்றும் கவலையுடன் தெரிவித்தார் கர்தினால் Krajewski.
சுத்தமான உடைகள் மற்றும் போர்வைகளை விட இது மனித மாண்பு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், 1,75,000 மக்கள் வாழும் கலாப்ரியன் நகரமான புனித ஃபெர்டினாந்தோவின் கூடார நகரத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து குடியேறிய நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் குடியிருப்பு அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும், பெரும்பாலும் வேலை ஒப்பந்தங்கள் இல்லாமல் பலர் வயல்களில் வேலை செய்கிறார்கள் என்றும், உரைக்கிறது இச்செய்திக் குறிப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்