தேடுதல்

Foyer Notre-Dame des Sans-Abri கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பினருடன் திருத்தந்தை Foyer Notre-Dame des Sans-Abri கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பினருடன் திருத்தந்தை  (Vatican Media)

கடவுளின் மூன்று செயல்கள் : நெருக்கம், இரக்கம் மற்றும் மென்மை

உங்கள் இருப்பு மற்றும் கேட்பதன் வழியாக, மரியாவும் இயேசுவும் அடிக்கடி மறக்கப்பட்ட தங்கள் சகோதரர் சகோதரிகளுடன் உடன் பயணிப்பதை நிறுத்துவதில்லை என்பதை நீங்கள் காட்டுகிறீர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மிகவும் தேவையில் இருப்போரை நோக்கிய கடவுளின் மென்மை மற்றும் பரிவிரக்கத்திற்கு நீங்கள் சாட்சிகள் என்றும், இத்தகைய ஏழை எளியோரிடம் நாம் கடவுளைக் காண வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 13, இப்புதனன்று, லியோனில் உள்ள Foyer Notre-Dame des Sans-Abri எனப்படும் பிரெஞ்சு கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்களின் நிறுவுநர் Gabriel Rosset போன்று ஏழைகளிடம் பரிவிரக்கம் கொண்டு வாழுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

Gabriel Rosset அவர்கள் ஏழைகளின் அழுகுரல்களுக்குச் செவிசாய்த்தார் என்றும் அவர்களிடமிருந்து தனது முகத்தைத் திருப்பிக்கொள்ளவில்லை என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை,  இந்தப் பிறரன்பு அமைப்பை நிறுவுவதன் வழியாக அவர் நம்பிக்கையுடனும் துணிவுடனும் உறுதியான வழியில் அம்மக்களுக்குப் பதிலளித்தார் என்றும் குறிப்பிட்டார்.

ஓர் ஏழையைத் தொடுவதும், அவரைப் பராமரிப்பதுதான், திருஅவையில் ஓர் அருள்குறி (sacramental) என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இன்றையச் சூழ்நிலையில் உங்கள் நிறுவனர் Gabriel Rosset அவர்களின் பணிகளை நீங்கள் முன்னெடுத்துச் செல்கிறீர்கள் என்றும் அவர்களைப் பாராட்டினார்.

நீங்களும் கடவுளின் பரிவிரக்கத்தின் கைவினைஞர்கள் என்றும், வாழ்விடங்களற்ற மக்களுடன் ஒன்றிணைந்து பயணிப்பதன் வழியாக, நீங்கள் அன்பின் நற்செய்திக்கு உறுதியான சான்றாகத் திகழ்கின்றீர்கள் என்றும் அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை.

மேலும் தேவையில் இருக்கும் இத்தகைய ஏழை எளியோருக்கு தங்குமிடம், உணவு மற்றும் புன்னகையை வழங்குவதன் வழியாக, உங்களின் கரங்களை நீட்டி, நீங்கள் அவர்களின் மனித மாண்பை மீட்டெடுக்கிறீர்கள் என்றும், உங்கள் அர்ப்பணிப்பு பாகுபாட்டுணர்வுகள் நிறைந்திருக்கும் நமது  உலகின் இதயத்தைத் தொடுகிறது என்றும் உரைத்தார் திருத்தந்தை.

வீடற்ற நம் அன்னையை பரிவிரக்கத்தின் கன்னியாக நான் இங்கே சிந்திக்க விரும்புகிறேன் என்று கூறிய திருத்தந்தை, அவ்வன்னை அனைவரையும் வரவேற்க தனது கரங்களை அகல விரிக்கிறார், ஏனென்றால் அனைவருக்கும் அன்னை மரியா மற்றும் கிறிஸ்துவுக்கு அடுத்ததாக ஓர் இடம் உள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அன்னை மரியா மிகவும் விலையுயர்ந்த செல்வமாக விளங்கும் இயேசுவை நமக்குக் கொடுக்கிறார் என்றும், அவர் ஏழைகளைத் தன்னுடன் நெருங்கி வர அனுமதிக்கிறார், அவரின் விரிந்த கரங்களிலிருந்து கனிவும் உதவியும் வெளிப்படுகிறது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

உங்கள் இருப்பு மற்றும் கேட்பதன் வழியாக, மரியாவும் இயேசுவும் அடிக்கடி மறக்கப்பட்ட தங்கள் ஏழை சகோதரர் சகோதரிகளுடன் உடன் பயணிப்பதை நிறுத்துவதில்லை என்பதை காட்டுகிறீர்கள் என்று அவர்களுக்கு எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அன்பின் வலிமையுடன் உங்கள் சேவையைச் செய்யுங்கள் என்றும், பல ஆண்களும் பெண்களும் சோதனைகளுக்கு மத்தியிலும் தங்கள் மனித மாண்பையும் நம்பிக்கையையும் மீண்டும் பெற்றுக்கொள்ள உதவுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2024, 14:17