பிறரன்புப் பணிகளில் இளையோர்க்கு கல்வியறிவு வழங்கப்படுவது அவசியம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இளையோருக்கு மற்றவர்களின் தேவைகளை நோக்கிய கல்வியை வழங்குவதும், அத்தகைய மக்களுக்குப் பணியாற்றும் அர்ப்பணிப்புள்ள உணர்வை எப்படி வளர்ப்பது என்பது பற்றிய அறிவையும் மிக விரைவாக வழங்குவது அவசியம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 30, சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் பிரெஞ்சு அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏறக்குறைய 150 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளர்ந்து வரும் இளைஞனுக்கு ஓர் இலட்சியம் தேவை என்றும் எடுத்துரைத்தார்.
தாராள மனப்பான்பையும், உறுதியான கேள்விகளுக்கு திறந்த மனமும் கொண்ட, வளர்ந்து வரும் இளையோர்க்கு ஓர் இலட்சியம் தேவை என்றும், இளையோர் சமூகத்தொடர்பு சாதனங்களில் தங்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் என்று தவறாகக் கருதாமல், எதார்த்தமான மற்றும் உண்மையான உலகில் அவர்களை ஈடுபடுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள். புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழைகளைச் சந்தித்தல் வழியாக மகிழ்ச்சியான வரவேற்பிற்கும் கொடைக்கும் தங்கள் உள்ளத்தை இளையோர் திறக்கின்றனர் என்றும், வேறுபாடுகள் என்னும் கண்ணுக்குத் தெரியாத சுவரினால் மறைக்கப்பட்ட மக்களுக்கு இதன் வழியாக பாதுக்காப்பை அளிக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
வேறுபாடுகளும் அலட்சியமும் எவ்வாறு மனிதத்தையும் மனித உணர்வையும் கொன்றுவிடுகின்றது என்று வெளிப்படுத்திய திருத்தந்தை அவர்கள், இந்நிலையைத் தடுக்க ஏற்கனவே உள்ள பல குறிப்பிடத்தக்க முயற்சிகள், அவை பின்பற்றப்படவும், ஊக்குவிக்கப்படவும், அதிகரிக்கப்படவும் மட்டுமே வலியுறுத்துகின்றன என்றும் கூறினார்.
வாழ்வின் இறுதிநிலையில் இருப்பவர்களுக்கு பணியாற்றுபவர்கள், தங்கள் பணிக்கு எப்போதும் உண்மையாக இருக்கவேண்டும் என்றும், முழுமனதுடன் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பராமரித்து ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தங்கள் நோயிலிருந்து அவர்கள் குணப்படுத்தப்பட முடியாவிட்டாலும் முழுமையான கவனிப்பும் நிவாரணமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
வெறும் வார்த்தைகள் மட்டும் எப்போதும் பயன்படாது மாறாக நோய்வாய்ப்பட்ட ஒருவரது கையைப் பிடித்து ஆறுதல் அளிக்க வேண்டும் என்றும், அத்தகைய செயல் நோயாளருக்கு மட்டுமல்ல நமக்கும் பல நன்மைகளை அளிக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்