தேடுதல்

இரண்டாம் ஜான் பால் திருப்பீட இறையியல் கல்லூரியின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் திருப்பீட இறையியல் கல்லூரியின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

சமூகப்பணிகளை அர்ப்பணிப்புடன் செய்பவர்கள் குடும்பத்திலுள்ளவர்கள்

குடும்பம் என்பது மகிழ்ச்சியின் நற்செய்தி அது நமது இதயத்தையும், முழு வாழ்வையும் மகிழ்ச்சியால் நிரப்புகின்றது

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒருங்கிணைந்த திருஅவையின் அடிப்படை நடைமுறைகளைக் கற்றுக்கொள்வற்கும் அனுவிப்பதற்கும் ஏற்ற ஒரு இடம் குடும்பம் என்றும், திருஅவையைக் கட்டெயெழுப்புவதற்கும் சமூகத்தின் பணிகளுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கும் பொறுப்பு பெற்றவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 25 திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் திருப்பீட இறையியல் கல்லூரியின் குடும்பம் மற்றும் திருமணம் சார்ந்த அறிவியல் அகாடமியின் குழுஉறுப்பினர்கள் ஏறக்குறைய 250 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளது பிள்ளைகளின் மனித மாண்பு மற்றும் உரிமைகளை மதிக்காத நாடுகள் உள்ளன என்றும், பெரும்பாலும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் அதிக அளவில் சுமைகளை சுமக்கின்றனர் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசுவின் சீடர்களில் பெண்கள் இருந்தார்கள், திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை எனக் குறிப்பிடுகின்றார் என்றும் தெரிவித்தார்.

ஆண் என்றும் பெண் என்று வேறுபாடு இல்லை எனக் கூறப்படுவதற்கான காரணம் மீட்பின் திட்டத்தில் ஆண்பெண் பாகுபாடு இன்றி, நாம் அனைவரும் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களாக, ஆபிரகாமின் வழித்தோன்றல்களாக, வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாக இருக்கின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

குடும்பம் என்பது மகிழ்ச்சியின் நற்செய்தி அது நமது இதயத்தையும், முழு வாழ்வையும் மகிழ்ச்சியால் நிரப்புகின்றது என்றும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் மனிதனுக்குள் வேரூன்றியிருக்கும் மீட்பிற்கான விருப்பத்தை எப்போதும் தேட உதவுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

திருமணம் என்பது கானா ஊரில் பரிமாறப்பட்ட திராட்சை இரசம் போன்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தொடக்க கால கிறிஸ்தவ சமூகங்களானது, வீடுகளில் புதிய நம்பிக்கையாளர்களை வரவேற்பதிலும், ஒருவர் மற்றவரைச் சந்திப்பதிலும் விரிவடைந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

திருஅவைக்குள் நுழைவது என்பது ஒரு புதிய உடன்பிறந்த உணர்வை அறிமுகப்படுத்துவது என்றும், திருமுழுக்கு அருளடையாளத்தினால் நிறுவப்பட்ட இச்செயல் அயலாரையும் எதிரியையும் அரவணைக்கும் ஆற்றல் பெற்றது என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், நம்பிக்கைப் பயணத்தில் போராடுபவர்களுக்கு உதவ திருஅவை தனது கதவை அகலமாகத் திறக்கின்றது என்றும் கூறினார்.

திருஅவை அனைவருக்குமானது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், திருமண விருந்திற்கு அழைப்பு பெற்றவர்கள் வராதபோது தெருவிற்கு சென்று சாலையில் தெருக்களில் காணும் நல்லவர்கள் கெட்டவர்கள் என அனைவரையும் அழைத்து வாருங்கள் என்று இயேசு கூரிய உவமையின் இறைவார்த்தைகளையும் மேற்கோள்காட்டினார்.

குடும்பத்தில் உள்ளவர்கள் திருஅவையின் உயிருள்ள கற்களாகவும், நம்பிக்கை, பணி, வாழ்க்கைக்கான திறந்த தன்மை, வரவேற்பு ஆகியவற்றின் சான்றுகளாக இருக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் ஒன்றிணைந்து நடப்போம், ஒருங்கிணைந்த பணி என்பது நற்செய்தியின் அடிப்படையில் நிறுவப்பட்ட பலன் மற்றும் உடன்பிறந்த உணர்வின் அடையாளமாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2024, 13:19