பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒரே கடவுளின் குழந்தைகளாகிய நாம் அனைவரும் ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும், மதிக்க வேண்டும், பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், உடன்பிறந்த உறவுடன் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதே அனைத்து மதங்களும் நமக்கு வலியுறுத்தும் உண்மையும் அடிப்படையும் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 30 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் "ஸ்ரீ நாராயண தர்ம சங்கோம் நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து சமய மாநாட்டின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 180 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"ஒரு சிறந்த மனிதநேயத்திற்காக மதங்கள் ஒன்றிணைவது" என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்படும் அம்மாநாட்டிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், நமது இக்காலத்திற்கு இக்கருப்பொருள் உண்மையில் மிகவும் பொருத்தமானது மற்றும் முக்கியமானது என்றும் எடுத்துரைத்தார்.
நாம் வாழ்கின்ற பொதுவான இல்லமாகிய இப்பூமியை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மதங்கள் வலியுறுத்தும் உண்மையை மதிக்கத் தவறிய காரணமே, உலகத்தின் இன்றைய இக்கட்டான சூழலுக்குக் காரணம் என்றும் கூறினார்.
வேற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளுக்கு இடையே இணக்கமான சகவாழ்வை உறுதிப்படுத்தவும், அமைதியை உருவாக்குபவர்களாக இருக்கவும், நாம் அனைவரும் அவற்றை வாழவும், அனைவருடனும் உடன்பிறந்த உறவையும் நட்புறவையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
அந்தந்த மத மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவும், "மரியாதை, கண்ணியம், இரக்கம், நல்லிணக்கம், சகோதர ஒற்றுமை ஆகியவற்றின் கலாச்சாரத்தை" ஊக்குவிப்பதில் நல்லெண்ணம் கொண்ட அனைவருடனும் நாம் எப்போதும் ஒத்துழைப்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்றும், இதன் வழியாக பரவி வரும் தனிமனித பண்பாடு, ஒதுக்கல், அலட்சியம், வன்முறை போன்றவற்றை தோற்கடிக்க உதவ முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்