தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள்  (Vatican Media)

அருளாளர்களின் வாழ்வு நமது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு உரமளிக்கட்டும்

“ஏழைகளின் வாயினின்று எழும் விண்ணப்பம் கடவுளின் செவிகளை எட்டும்” என்ற கருப்பொருளில் நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை திருஅவையில் அகில உலக வறியோர் நாள் சிறப்பிக்கப்பட்டது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நவம்பர் 16 சனிக்கிழமை அல்பேனியாவின் ஸ்குத்தாரியில் அருளாளர்களாக உயர்த்தப்பட்ட Frati Minori சபையைச் சார்ந்த அருள்பணியாளர் Luigi Palić, மற்றும் 20ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்திற்காக துன்புற்று மறைசாட்சியாக இறந்த மறைமாவட்ட அருள்பணியாளர் Gjon Gazulli, நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை அருளாளராக உயர்த்தப்பட்ட கிறிஸ்து அரசர் சபையை நிறுவிய Max Josef Metzger ஆகியோரின் வாழ்வு நமது நம்பிக்கைக்கு உரமளிக்கட்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் மூன்று புதிய அருளாளர்களுக்காகக் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக துன்புறும் இக்கால கிறிஸ்தவர்களுக்கு புதிய அருளாளர்களின் தியாக  வாழ்வு ஊக்கத்தையும் உறுதியையும் அளிக்கட்டும் என்றும் கூறினார்.

“ஏழைகளின் வாயினின்று எழும் விண்ணப்பம் கடவுளின் செவிகளை எட்டும்” என்ற கருப்பொருளில் நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை திருஅவையில் சிறப்பிக்கப்படும் அகில உலக வறியோர் நாளைக் குறித்து தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மறைமாவட்டங்கள் பங்குத்தளங்கள், என இந்நாளை சிறப்பிக்கும் அனைவருக்கும் தனது நன்றியினையும் தெரிவித்தார்.

மேலும் சாலை விபத்தில் இறந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் செபிக்க வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், சாலை விபத்துக்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நம்மை நாம் அர்ப்பணிப்போம் என்றும் கூறினார்.

ஏழைகளுக்கு ஏதாவது கொடுத்து உதவ முயற்சிக்கின்றேனா அப்படி உதவும்போது அவர்களின் கைகளைத் தொட்டு உதவுகின்றேனா? அவர்களது கண்களைப் பார்த்து உதவுகின்றேனா என்று ஒவ்வொருவரும் தனக்குள் கேள்வி கேட்டுக்கொள்ள வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள் ஏழைகள் காத்திருக்க முடியாது என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.

முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுக்கான செப நாளை நவம்பர் 18 திங்கள் கிழமை சிறப்பிக்க இருக்கும் இத்தாலிய தலத்திருஅவைகளோடு தனது உடனிருப்பை வெளிப்படுத்துவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு முறைகேடுகளும் நம்பிக்கை துரோகம், வாழ்க்கைக்கு செய்யும் துரோகம் எனவே, "நம்பிக்கையை மீண்டும் உருவாக்க" செபிப்பது மிக அவசியமானது என்றும் கூறினார்.

நவம்பர் 21 வியாழனன்று சிறப்பிக்கப்படும் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு அனைத்து மீனவர்களையும் நினைவுகூர்ந்து செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  கடலின் நட்சத்திரமாக விளங்கும் அன்னை மரியா மீனவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாத்து பராமரித்து வழிநடத்தட்டும் என்றும் கூறினார்.

இத்தாலியர்கள் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள், சிறப்பு குழுக்கள் என அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அமைதிக்காக செபிப்போம்: பாதிக்கப்பட்ட உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன், மியான்மார், சூடான் மக்களுக்காக செபிப்போம் என்றும் கூறினார்.

மனிதாபிமானமற்றதனத்தைப்  போர் உருவாக்குகின்றது, ஏற்றுக்கொள்ள முடியாத குற்றங்களை ஏற்படுத்துகிறது என்றும், அமைதியை விரும்பி அதற்காகக் குரல் எழுப்பும் மக்களின் குரலுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டும் என்றும் எடுத்துரைத்து தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2024, 14:04