தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் மூவேளை செப உரையில் பங்கேற்ற மக்கள் வத்திக்கான் வளாகத்தில் மூவேளை செப உரையில் பங்கேற்ற மக்கள்  (ANSA)

அமைதி மற்றும் உரையாடலுக்கான வழிவகைகள் உருவாகட்டும்

போர் கைவிடப்பட்டு, சட்டம் மற்றும் உரையாடல்கள் வழியாக பிரச்சனைகள் தீர்க்கப்படட்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆயுதங்களின் செயல்கள் நிறுத்தப்பட்டு, அமைதி மற்றும் உரையாடலுக்கான வழிவகைகள் உருவாகட்டும் என்றும், போரினால் துன்புறுத்தப்பட்ட உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார் தென்சூடான் பகுதி மக்களுக்காக செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறமக்களின் சுதந்திரத்திற்கு எதிரான குற்றத்தின் கருவியாகவும், பன்னாடு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைக்கு இடையூறாகவும் இருப்பதால் போரினை இத்தாலி வெறுக்கின்றது என்ற இத்தாலிய அரசியலமைப்பின் எண் 11-ஐ சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனை மனதில் நிறுத்தி நாம் அனைவரும் அமைதியை நோக்கி முன்னோக்கிச்செல்ல அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறினார்.

போரைப்பற்றிய இக்கொள்கையானது  உலகம் முழுவதும் செயல்படுத்தப்படட்டும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், போர் கைவிடப்பட்டு சட்டம் மற்றும் உரையாடல்கள் வழியாக பிரச்சனைகள் தீர்க்கப்படட்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்பெயினின் வலேன்சியா பகுதி மக்களுக்காகவும் இஸ்பெயினின் பிற பகுதி மக்களுக்காகவும் தெடர்ந்து செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய மக்களுக்காக நான் என்ன செய்கிறேன்? எதைக் கொடுக்கின்றேன்? செபிக்கின்றேனா? என்பன போன்ற கேள்விகளைக் குறித்து சிந்திக்க அழைப்புவிடுத்தார்.

உரோம், இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசியாவின் இரத்த தானம் செய்பவர்கள், கார்மலைட் தூய ஆவியின் மறைப்பணியாளர்கள் சபையினர் ஆகியோருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2024, 14:47