தேடுதல்

இத்தாலியின் நேபிள்ஸ் நகர் பேராயர் Domenico Battaglia இத்தாலியின் நேபிள்ஸ் நகர் பேராயர் Domenico Battaglia  

புதிய கர்தினாலை அறிவித்தார் திருத்தந்தை!

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை நிகழும் திருவழிபாட்டில், 21 புதிய கர்தினால்களுக்கு சிவப்புநிற தொப்பியும், மோதிரமும், அவர்களுக்குரிய திருஆட்சிப்பீடமும் திருத்தந்தையால் வழங்கப்படும்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இத்தாலியின் நேபிள்ஸ் நகர் பேராயர் Domenico Battaglia அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதிய கர்தினாலாக உயர்த்தியுள்ளதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

நவம்பர் 4, இத்திங்கள் மாலை, திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள் திருத்தந்தையின் இந்த நியமனத்தை உறுதிப்படுத்தியுள்ள வேளை, வரும் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தொடரின் போது உருவாக்கப்படும் புதிய கர்தினால்களின் பெயர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சேர்த்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

61 வயது நிரம்பிய இத்தாலியின் நேபிள்ஸ் நகர் பேராயர் Domenico Battaglia அவர்கள் கடந்த 2020- ஆம் ஆண்டு முதல் பேராயராகப் பணியாற்றி வருகிறார். இவர் தேவையில் இருப்போருக்கு உதவுபவர் என்று எல்லோராலும் நன்கு அறியப்பட்டவர்.

தெற்கு இத்தாலிய மாநிலமான கலாப்ரியாவில் பிறந்த இவர், முதலில் Catanzario-வின்  Satriano-வைச் சேர்ந்தவர். நேபிள்ஸ் பேராயராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இவர் Benevento மாநிலத்தில் உள்ள Cerreto Sannita-Telese-Sant'Agata de' Goti, மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றினார்.

Catanzaro-வில் உள்ள San Pio X என்ற மாநில பாப்பிறைக் குருமடத்தில் தத்துவம் மற்றும் இறையியலில் தனது படிப்பை முடித்தார். 1988-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி  அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பல ஆண்டுகளாகப் பங்குப் பணியாளராக, அதிபராக, மறைமாவட்ட அலுவலகங்கள் மற்றும் திருஅவை சட்டம் சார் துறைகளின் இயக்குனராக இருந்து வருகிறார்.

2016-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதியன்று, Cerreto Sannita-Telese-Sant'Agata de' Goti,-யின் ஆயராகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட இவர், இதே ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதியன்று அம்மறைமாவட்டத்தின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

Don Mimmo என்று அழைக்கைப்படும் இவர் தெற்கு இத்தாலியில் தெருவில் இறங்கிச் சென்று பணியாற்றும் நல்மேய்ப்பர் என்று பெயர் பெற்றவர். குறிப்பாக குடி மற்றும் போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர். அண்மையில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் அமர்வுகளின் உறுப்பினர்களில் ஒருவராக இருக்க திருத்தந்தையால் அழைப்புப் பெற்றவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2024, 13:49