தேடுதல்

பன்னாட்டு ஜெயின் மண்டலக்குழு உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பன்னாட்டு ஜெயின் மண்டலக்குழு உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

சிறந்த உலகை உருவாக்க உயிரளிக்கும் பல்சமயக் கூட்டங்கள்

சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் போன்றோரின் நல்வாழ்விற்காக எடுக்கப்படும் முன்முயற்சிகள் தீவீரமாகவும் முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செய்யப்பட வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கும், ஒன்றிணைந்து செயல்படுவதற்கான பொதுவான விருப்பத்தை வலுப்படுத்துவதற்கும், உதவுவதற்கும் பல்சமயக் கூட்டங்கள்  உயிரளிக்கின்றன என்றும், சமூக நட்பு, ஒற்றுமை, அமைதி என்னும் மூன்றினை நாம் மறந்துவிடக்கூடாது, நம்பிக்கையை விதைப்பதற்கு ஒருபோதும் நாம் சோர்ந்துவிடவோ அஞ்சவோக் கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 25, திங்கள் கிழமை வத்திக்கானில் பன்னாட்டு ஜெயின் மண்டலக்குழு உறுப்பினர்கள் ஏறக்குறைய 41 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் போன்றோரின் நல்வாழ்விற்காக எடுக்கப்படும் முன்முயற்சிகள் தீவீரமாகவும் முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  

சமூகத்தை ஆட்கொள்ளும் பெரும்பாலான பிரச்சனைகள் தனித்துவம் மற்றும் அலட்சியத்தால் ஏற்படுகின்றன என்றும், இது பலரை குறிப்பாக தங்களது அருகில் வாழ்பவர்களின் மாண்பு மற்றும் உரிமைகளை புறக்கணிக்க வழிவகுக்கிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஒருபுறம் சிறுபான்மையினர் மேல் ஆதிக்கம் செலுத்துகின்ற, ஒதுக்கி வைக்கின்ற குழுக்கள் இருந்தாலும், மறுபுறம், சமூக நட்பு, ஒற்றுமை மற்றும் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட குழுக்களும் இச்சமூகத்தில் வாழ்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

பல்சமய உரையாடல் திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் AYUSO GUIXOT Miguel Ángel அவர்கள் உடல் நலமில்லாமல் இருப்பதை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் அவருக்காக சிறப்பாக செபிக்க வலியுறுத்தினார்.

மனிதர்களைப் படைத்த கடவுள் அவர்களுக்கு சமமான உரிமைகள், கடமைகள், மனித மாண்புகள் கொண்டு படைத்தார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைவரும் சகோதர சகோதரிகளாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், இத்தகைய உலகளாவிய சகோதரத்துவத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் எடுத்துரைத்தார்.

நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் அன்பைப் பரப்பலாம் என்றும், வேறுபாடுகளை மதித்து, தேவையிலிருப்பவர்களுக்குத் தங்களை அர்ப்பணித்து வாழலாம் என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இச்செயலே ஒருவரையொருவர் அன்பு செய்யவும் நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் கவனித்துக்கொள்ளவும் எப்போதும் புதிய ஆற்றலை அளிக்கிறது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2024, 09:51