தேடுதல்

 மறைக்கப்பட்ட கிறிஸ்தவ தளங்கள் பற்றிய ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை மறைக்கப்பட்ட கிறிஸ்தவ தளங்கள் பற்றிய ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

சான்று வாழ்க்கை வாழ்ந்த உன்னத மக்கள் நாகசாகி கிறிஸ்தவர்கள்

ஒரு சிறந்த தளமும், மறைக்கப்பட்ட தளமுமான நாகசாகி பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தல், அவ்விடத்தின் பாதுகாப்பை உறுதிசெய்தல் போன்றவை எதிர்கால ஜப்பான் கிறிஸ்தவர்களுக்கு உயிருள்ள சான்றாக இருக்கும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலகளாவிய திருஅவையில் சான்றுவாழ்க்கை வாழ்ந்த உன்னத மக்களான ஜப்பான் கிறிஸ்தவ மக்களின் வரலாற்றை எடுத்துரைக்கவும், அவர்கள் வாழ்ந்த இடங்களை, மறைக்கப்பட்ட தளங்களை ஆராய்ச்சி செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்வதும் பாராட்டப்படவேண்டிய சிறந்த செயல் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 30 சனிக்கிழமை வத்திக்கானில் ஜப்பான் நாகசாகி பகுதியின் மறைக்கப்பட்ட கிறிஸ்தவ தளங்கள் பற்றிய ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு சிறந்த தளமும், மறைக்கப்பட்ட தளமுமான நாகசாகி பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தல், பாதுகாப்பை உறுதிசெய்தல், போன்றவை எதிர்கால ஜப்பான் கிறிஸ்துவர்களுக்கு உயிருள்ள சான்றாக இருக்கும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வருகின்ற டிசம்பர் 7 ஜப்பான் தலத்திருஅவைக்கு ஒரு கர்தினால் உருவாக இருக்கின்றார் என்ற மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

ஜப்பானில் கிறிஸ்தவத்தை உருவாக்கவேண்டும் என்று மாபெரும் கனவு கண்ட தூய பிரான்சிஸ் சவேரியாரின் விழாவிற்காக நம்மை நாம் தயாரிக்கும் வேளையில் அவ்வாராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்திப்பது குறித்த தனது மகிழ்ச்சியை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  புனித சவேரியாரின் கனவானது கல்வி, பாதுகாப்புப் பணி, நற்செய்தி வரலாறு போன்றவற்றின் வழியாக ஜப்பானில் நனவாகட்டும் என்றும் கூறினார்.

முதல் மறைப்பணியாளர்களின் தியாக வாழ்வை நாம் எண்ணிப்பார்க்கும் பொழுது, அவர்களின் விடாமுயற்சி,  துணிவு, ஆகியவற்றை நினைவுகூரவேண்டும் என்றும், மிகச்சிறிய எண்ணிக்கையிலான ஜப்பானிய கிறிஸ்தவ சமூகத்தில் உள்ள இளையோர் முன்னோர்களின் மறைசாட்சி வாழ்வைப் புரிந்துகொள்ளவும், கிறிஸ்துவின் பெயருக்காக துன்பத்தை ஏற்ற அவர்களின் துணிவை உணர்ந்துகொள்ளவும் வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

துன்புறும் கிறிஸ்தவர்கள், போர், வன்முறை, வெறுப்பு, அடக்குமுறை போன்ற கசப்பான அனுபவங்களால் துன்புறும் மக்கள் அனைவருக்காகவும் தொடர்ந்து செபிக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், உலகளாவிய நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதியின் அரசான கிறிஸ்துவின் வருகைக்காக இன்னும் அதிகமாக ஊக்கத்துடன் செபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2024, 14:10