தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

இறைவன் மீது கொண்டுள்ள ஆழமான அன்பின் வெளிப்பாடு நூற்றாண்டு

எஸ்தோனியாவில் கத்தோலிக்க சமூகத்தை வளர்ப்பதற்கும், நிலைநிறுத்துவதற்கும் உறுதுணையாக இருந்த துணிச்சலும், உறுதியும் கொண்ட முன்னோர்களின் நம்பிக்கையின் முன்மாதிரிக்காக எல்லாம் வல்ல கடவுளுக்கு மக்களுடன் இணைந்து நன்றி தெரிவிகின்றேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

உயிர்த்துடிப்புள்ள தலத்திருஅவையாக செயல்பட நாடு முழுவதுமுள்ள மக்கள் அனைவரையும் இரக்கம் மற்றும் ஆன்மிக ஊட்டச்சத்தின் ஆதாரமாக தாலின் தலத்திருஅவை மாற்றியுள்ளது என்றும், துன்பங்கள், அடக்குமுறைகள் இருந்தாலும் இறைவன் மீது கொண்டுள்ள ஆழமான அன்பை நூற்றாண்டு எடுத்துரைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 4 திங்கள்கிழமை எஸ்தோனியாவின் தாலின் அப்போஸ்தலிக்க நிர்வாகத்தின் 100 ஆவது ஆண்டை முன்னிட்டு தாலின் மறைமாவட்ட ஆயர் பிலிப் ஜோர்தானுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

எஸ்தோனியாவில் கத்தோலிக்க சமூகத்தை வளர்ப்பதற்கும், நிலைநிறுத்துவதற்கும் உறுதுணையாக இருந்த துணிச்சலும், உறுதியும் கொண்ட முன்னோர்கள் வழங்கிய நம்பிக்கையின் முன்மாதிரிக்காக எல்லாம் வல்ல கடவுளுக்கு மக்களுடன் இணைந்து நன்றி தெரிவிகின்றேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், இறைஊழியரான பேராயர் எட்வர்ட் (Eduard Profittlich) அவர்களின் சான்றுள்ள வாழ்வைக் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது மந்தையாம் மக்களின் அருகில் இருந்து அவர்களுக்காகத் துணிவுடன் இரத்தம் சிந்தி நம்பிக்கையின் விதைகளை மக்கள் மனதில் விதைத்தவர் பேராயர் எட்வர்ட் என்றும், அவருடைய சான்று வாழ்வை நமது வாழ்விற்கு உத்வேகமாக எடுத்துக்கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மறைமாவட்டத்தின் சிறப்பம்சமாக விளங்கும் நம்பிக்கை மற்றும் பிறரன்புப் பணிகள் இக்கால அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் நம்பிக்கையுள்ள மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியான மறைப்பணி சீடர்களாக எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தட்டும் என்று எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

நூற்றாண்டு கொண்டாடும் இந்நாளானது ஆன்மிகப் புதுப்பித்தலுக்கான ஒரு வாய்ப்பையும், நற்செய்தி அறிவிப்பிற்கான புதிய துணிவையும் எஸ்தோனியா நாட்டில் இருக்கும் மக்கள் அனைவருக்கும்  கொடுக்கட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார் திருத்தந்தை.

கடவுளின் அன்பு, இரக்கம் மற்றும் நல்லிணக்க செய்தியை அனைவருக்கும் அறிவித்து, இயேசுவின் ஒளி, நற்செய்தியின் விடுதலை ஆற்றல் போன்றவற்றை கடவுளில் நம்பிக்கையற்றவர்களிலும் கொண்டு வர முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2024, 13:32