ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் நம்பிக்கை என்பது ஒரு கொடை மற்றும் கடமை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நம்பிக்கை என்பது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஒரு கொடை மற்றும் பணி என்றும் நம்பிக்கை என்பது ஒரு கொடை, ஏனென்றால் அதை நமக்கு வழங்குவது கடவுள்தான் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்பிக்கையின் இறையியல் நற்பண்பு பற்றிய திருத்தந்தையின் பல்வேறு உரைகளைத் தொகுத்து "நம்பிக்கை என்பது இரவில் ஓர் ஒளி" (Hope is a light in the night) என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புதிய நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரையில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.
'நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்ற கருப்பொருளுக்கு தான் அர்ப்பணிக்க விரும்பிய புனித ஆண்டான 2025-ஆம் ஆண்டின் யூபிலி, இந்த அடிப்படை மற்றும் தீர்க்கமான கிறிஸ்தவ நல்லொழுக்கத்தைப் பற்றி சிந்திக்க நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
குறிப்பாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மூன்றாம் உலகப் போர் ‘பகுதி பகுதியாக’ நடந்து கொண்டிருக்கிற இவ்வேளையில், அது நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படுகின்ற இருண்ட ஊக்கமின்மை மற்றும் வெறுப்பு மனப்பான்மைக் குறித்த அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
கடவுள் நமக்கு ஒவ்வொரு நாளும் அளிக்கும் இந்தக் கொடையை வரவேற்பதே நம்பிக்கை என்று கூறியுள்ள திருத்தந்தை, நம்பிக்கை என்பது, தனது ஊடுருவ முடியாத பெருமகிழ்ச்சி நிறைந்த இடத்தில் தன்னை அடைத்துக் கொள்ளாமல், சதையையும் இரத்தத்தையும், வரலாற்றையும் நாள்களையும், நம் பங்கைப் பகிர்ந்து கொள்ள தன்னை உருவாக்கிக் கொண்ட ஒரு கடவுளால் அன்புகூரப்படும், தேடப்பட்ட, விரும்பும் அற்புதத்தை சுவைப்பதாகும்.
இந்த நூலின் ஒவ்வொரு வாசகரையும் ஓர் எளிய ஆனால் உறுதியான உணர்வை வெளிப்படுத்த அழைக்கிறேன் அதாவது, மாலையில், படுக்கைக்குச் செல்வதற்கு முன், கடந்த நாளில் நீங்கள் வாழ்ந்த மற்றும் சந்தித்த நிகழ்வுகளைப் பற்றி சிந்திக்கும்போது, அதற்கான அடையாளத்தைத் தேடுங்கள் என்றும் தனது அணிந்துரையில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
நாம் குழந்தைகளைப் போல இருக்க வேண்டும், அவர்களின் வியப்பூட்டும் உணர்வுடன், உலகத்தை சந்திக்கவும், அதை அறிந்துகொள்ளவும், பாராட்டவும் வேண்டும் என்றும், நம்பிக்கையை அடையாளம் காண நம்மை நாமே பயிற்றுவிப்போம் என்றும் அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
மேலும் இந்த உலகில் எவ்வளவு நன்மை இருக்கிறது என்று நாம் வியப்படையும்போது நம் இதயங்கள் நம்பிக்கையுடன் ஒளிரட்டும். அப்போதுதான் நம்மைச் சுற்றி இருப்பவர்களுடைய எதிர்காலத்தின் விளக்குகளாக நாம் ஒளிர முடியும் என்றும் கூறி தனது அணிந்துரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்