தேடுதல்

உரோம் லௌரென்தினோ கல்லறையில் திருப்பலியின்போது திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் லௌரென்தினோ கல்லறையில் திருப்பலியின்போது திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

உரோம் லௌரென்தினோ கல்லறையில் திருத்தந்தையின் திருப்பலி

உரோம் லௌரென்தினோ மீட்பர் இயேசு கல்லறையின் சிற்றாலயத்திற்கு முன் உள்ள வளாகத்தில், இறந்த அனைத்து ஆன்மாக்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக நவம்பர் 2 சனிக்கிழமை திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நவம்பர் 2 சனிக்கிழமை அனைத்து ஆன்மாக்களின் திருவிழாவை முன்னிட்டு உரோம் நகரில் உள்ள லௌரென்தினோ கல்லறைக்கு சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்குள்ள சிறார் கல்லறை மற்றும் கருவிலேயே இறந்த குழந்தைகளுக்கான கல்லறை அருகில் சிறிது நேரம் அமைதியில் செபித்தார்.

உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் உரோம் லௌரென்தினோ மீட்பர் இயேசு கல்லறையை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நுழைவாயிலில் லௌரென்தினோ பகுதி நகர மேயர் மற்றும் அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

அதன்பின் அங்குள்ள சிறார் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சிசுக்களுக்காக செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021 ஆம் ஆண்டில் சாரா எனப்படும் சிசுவை இழந்த அதன் தந்தை ஸ்தேஃபனோ என்பவரைச் சந்தித்து, அவருடன் சிறிது நேரம் உரையாடி அவருக்கு ஆறுதல் கூறினார்.

திருப்பலியில் பங்கேற்பதற்காகக் கூடியிருந்த மக்கள் அனைவரையும் கையசைத்து வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் லௌரென்தினோ மீட்பர் இயேசு கல்லறையின் சிற்றாலயத்திற்கு முன் உள்ள வளாகத்தில் இறந்த அனைத்து ஆன்மாக்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி நிறைவேற்றினார்.

உரோமில் உள்ள மூன்றாவது பெரிய கல்லறையான லௌரென்தீனோ கல்லறைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை அவர்கள் இத்திருப்பலியின்போது மறையுரை எதுவும் ஆற்றவில்லை மாறாக அந்நேரத்தில் அமைதியில் சிந்திக்கவும் செபிக்கவும் அழைப்புவிடுத்தார்.

உரோம் நகரில் உள்ள 11 கல்லறைகளில் 3 நிலப்பரப்பளவில் பெரிய கல்லறைகளாகவும் 8 சிறிய கல்லறைகளாகவும் கூறப்படுகின்றன. மொத்தம் 250 ஹெக்டேர் நிலப்பரப்பு கல்லறைகளுக்காக உள்ளது.

வெரானோ (80), ஃபிளமினியோவில் உள்ள பிரிமா போர்த்தா (140), லௌரென்தினோ (21) ஆகிய கல்லறைகள் பெரிய கல்லறைகளாகவும், Ostia Antica, S.Vittorino, Isola Farnese, Castel di Guido, Cesano, Maccarese, S. Maria del Carmine-Parrocchietta, S. Maria di Galeria ஆகியவை சிறிய கல்லறைகளாகவும் திகழ்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2024, 12:16