தேடுதல்

நவம்பர் மாத ஜெபக் கருத்து : குழந்தையை இழந்தோருக்காக....

குழந்தைகளை இழந்து துயருறும் பெற்றோர்கள் அனைவரும், தங்கள் சமூகத்தில் ஆறுதல் பெற்று, ஆறுதல் தரும் தூய ஆவியாரின் வழியாக மன அமைதியைப் பெறவேண்டும்

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

குழந்தைகளை  இழந்து துயருறும் பெற்றோர்கள் அனைவரும், தங்கள் சமூகத்தில் ஆறுதல் பெற்று, ஆறுதல் தரும் தூய ஆவியாரின் வழியாக  மன அமைதியைப் பெறவேண்டும் என்று கூறியுள்ளார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 31, வியாழனன்று வெளியிட்டுள்ள நவம்பர்  மாதத்திற்கான செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தையை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும், பெற்றோர் அல்லது தனது வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு கூட ஆறுதல் அளித்துவிடலாம் ஆனால், குழந்தையை இழந்த பெற்றோருக்கு ஆறுதலளிப்பது கடினம் என்று தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

ஆறுதலளிக்கும் நோக்குடன் கூறப்படும் வார்த்தைகள் கூட சில நேரங்களில் குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு, தங்களின் காயங்களை அதிகப்படுத்துவதாகத் தோன்றலாம், எனவே, ஆறுதலளிக்கும் வார்த்தைகளுக்குப் பதிலாக ஆண்டவர் இயேசுவை பின்பற்றி, அவர் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்தரோ அதே போல் பாதிக்கப்பட்டவர்களின் உடனிருந்து, அவர்களின் வலிகளை புரிந்து அவர்களுக்கு செவிமடுக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

மேலும், குழந்தையை இழந்து துன்புறும் பெற்றோர், தங்களைப் போன்றே இழப்புகளை அனுபவித்து, நம்பிக்கையால் புதுப்பிறப்பு அடைந்தவர்களிடம் தங்களின் துயர்களை பகிர்ந்து கொள்வதன் வழியாக ஆறுதல் பெறலாம் என்றும் தன் நவம்பர்  மாத செபக் கருத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2024, 16:14