ஒன்றிணைந்த பயணத்தின் இறையியலை உருவாக்குங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிறிஸ்துவை மீண்டும் வாழ்வின் மையமாகக் கொள்வது என்பது நம்பிக்கையை மீண்டும் எழுப்புவதாகும், மேலும் இதையே அதாவது, விடாமுயற்சி, ஞானம் மற்றும் தொலைநோக்கு மற்றும் மற்ற அறிவுத் துறைகளுடன் உரையாடல் ஆகியவற்றை இறையியல் துல்லியமாக செய்வதற்கு அழைக்கப்படுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
நவம்பர் 28, வியாழன் இன்று, அனைத்துலக இறையியல் கழகத்தின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இயேசுவின் தூய்மைமிகு இதயத்திற்கு நெருக்கமாக இருப்பதன் வழியாக, அவர்களின் இறையியல் அதன் மூலத்திலிருந்து ஈர்க்கப்பட்டு, திருஅவையிலும் உலகிலும் பலனைத் தரும் என்றும் உரைத்தார்.
யூபிலி ஆண்டின் புனிதக் கதவு திறக்கும் தருணத்தை நாம் நெருங்கி வருகிறோம் என்றும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பதினாறாவது வழக்கமான கூட்டத்தை அண்மையில் முடித்தோம் என்றும் கூறிய திருத்தந்தை, இந்த இரண்டு நிகழ்வுகளின் பின்னணியில், கிறிஸ்துவை மீண்டும் வாழ்வின் மையத்தில் கொள்ள வேண்டிய அவசியம், ஒன்றிணைந்த பயணத்தின் இறையியலை உருவாக்குவது ஆகிய இரண்டு சிந்தனைகளை அவர்களுக்கு வழங்க விரும்புவதாகக் கூறினார்.
கிறிஸ்துவை மீண்டும் வாழ்வின் மையமாகக் கொள்ள வேண்டியதன் அவசியம்
முதலாவதாக, கிறிஸ்துவை மீண்டும் நம் வாழ்வின் மையமாகக் கொள்ள வேண்டும் என்பது இன்றைய சிக்கலான மற்றும் அடிக்கடி எதிரெதிர் கருத்துக்கள் வெளிப்படும் இவ்வுலகில், மோதல்களாலும் வன்முறையாலும் சிதைந்து, கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட மற்றும் ஆவியில் நமக்கு அருளப்பட்ட கடவுளின் அன்பு ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சகோதரத்துவத்துடன் வாழவும் நீதியின் மற்றும் அமைதியின் கைவினைஞராகவும் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கும் ஒர் அழைப்பாக அமைகிறது என்று விளக்கினார்.
கிறிஸ்துவை மீண்டும் வாழ்வின் மையமாகக் கொள்வது என்பது இந்த நம்பிக்கையை மீண்டும் எழுப்புவதாகும், மேலும் இதையே அதாவது, விடாமுயற்சி, ஞானம் மற்றும் தொலைநோக்கு மற்றும் மற்ற அறிவுத் துறைகளுடன் உரையாடல் ஆகியவற்றை இறையியல் துல்லியமாக செய்வதற்கு அழைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்த பயணத்தின் இறையியலை உருவாக்குவது
இரண்டாவதாக, ஒன்றிணைந்த பயணத்தின் இறையியலை உருவாக்குவது என்பது கிறிஸ்துவை நமது வாழ்வின் மையமாகக் கொள்வதுடன் ஒன்றிணைந்த பயணத்திற்கான திருஅவையின் பரிமாணத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு தான் அவர்களைக் கேட்டுக்கொள்வதாகக் கூறிய திருத்தந்தை, இதன் வழியாக அதன் மறைபரப்பு நோக்கம் மற்றும் நமது கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளின் பல்வேறு வகைகளில் கடவுளின் முழு மக்களின் பங்கேற்பையும் வலியுறுத்துகிறது என்றும் விவரித்தார்.
ஒரு புதிய, மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் துணிச்சலான மறைபரப்பு கட்டத்திற்கு உதவக்கூடிய, ஊக்குவிக்கும் மற்றும் துணைபுரியும் ஓர் இறையியல் சிந்தனை, ஒரு துணிச்சலான படியை முன்னோக்கி எடுத்து, கெரிக்மா (kerygma) மற்றும் திருஅவையின் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த பயணத்தின் இறையியலை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தன்னால் கூற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்