இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கான திருத்தந்தையின் செபம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறந்த நமது சகோதர சகோதரிகள் இளைப்பாறும் இடமான கல்லறைக்கு நாம் செல்லும்போது இறந்து அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையைப் புதுப்பிக்கிறோம் என்றும், நமது இறந்த உடல்கள் கடைசி நாளில் விழித்துக்கொள்கின்றன, இறைவனில் இளைப்பாறியவர்கள் இறப்பின் மீது வெற்றியுடன் இணைந்திருப்பார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 2 சனிக்கிழமை உரோமின் மூன்றாவது பெரிய கல்லறையான லௌரென்தினோ கல்லறைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறந்த அனைத்து ஆன்மாக்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகத் திருப்பலியின் நிறைவில் இவ்வாறு செபித்தார்.
இறந்த நம் சகோதரிகள் அனைவரும் இயேசுவோடு உயிர்த்தெழுவார்கள் என்ற உறுதியுடன், இறைத்தந்தையின் அருளையும் ஆசீரையும் நாடி ஒருமித்து நாம் அனைவரும் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எல்லாம் வல்ல இறைவன் நமது அன்புக்குரியவர்களுக்கான இச்செபத்தினை தமது இரக்கமுள்ள கரங்களை விரித்து, தூய எருசலேமின் மகிமையில் ஏற்றுக்கொள்ளட்டும் என்றும் கூறினார்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய இறைவன், அவரது அளவற்ற இரக்கத்தால், இயேசுவின் உயிர்த்தெழுதலின் வழியாக, அழியாத அல்லது மறையாத உயிருள்ள நம்பிக்கையாக நம்மை மீண்டும் உருவாக்கினார் என்றும், இவ்வுலகை விட்டுப் பிரிந்த நமது அன்புக்குரியவர்கள் அனைவருக்காக நாம் செபிக்கும் செபத்தையும் அவர் கேட்பாராக என்றும் கூறினார்.
இழப்பின் துயரில் வேதனையில் இருப்பவர்களுக்கு ஆறுதலையும், இறந்தவர்கள் இறைவனில் வாழ்கிறார்கள், பூமியில் புதைக்கப்பட்ட அவர்களின் உடல்கள் ஒரு நாள் திருமகனின் உயிர்ப்பின் வெற்றியில் பங்குகொள்ளும் என்று செபித்த திருத்தந்தை அவர்கள், திருஅவையின் இத்தகைய பாதையில் தூய கன்னி மரியாவை ஒளிரும் அடையாளமாக வைத்துள்ளார் என்றும் எடுத்துரைத்தார்.
முடிவில்லாத மகிமையாகிய உம்மை நோக்கிச் செல்லும் இந்தப் பாதையிலிருந்து எந்தத் தடையும் திசைதிருப்பாது என்ற நம்பிக்கையை அன்னை மரியின் பரிந்துரையின் வழியாக நிலைநிறுத்த வேண்டும் என்று கூறி தனது செபத்தை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்