தேடுதல்

கர்தினால் மிகுவேல் ஆயுசோ (கோப்புப் படம்) கர்தினால் மிகுவேல் ஆயுசோ (கோப்புப் படம்)  (Vatican Media)

மறைந்த கர்தினால் Ayuso-வுக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி!

இஸ்லாமியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் மற்றும் உலகெங்கிலுமுள்ள அனைத்து மதங்களுடன் உரையாடல் நடத்துவதற்கு திருஅவைக்குப் பெரும் ஊக்கமாக இருந்தவர் கர்தினால் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மக்களிடையே உடன்பிறந்த உறவை வளர்க்கும் அற்புதமான பணிக்குத் தன்னை முழுவதும் அர்பணித்துக்கொண்டவர் என்று நவம்பர் 25, இத்திங்களன்று இறைபதம் அடைந்த கர்தினால் மிகுவேல் ஆயுசோ குய்க்ஸோ அவர்களுக்கு வழங்கியுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு அப்போஸ்தலிக்கப் பணியிலும் மக்களுக்கும், மதங்களுக்கும் இடையே உடன்பிறந்த உறவை வலுப்படுத்துவதற்காகத் தன்னை அர்ப்பணித்ததன் வழியாக மனிதகுலத்தின் மீது கடவுளின் அன்பிற்கு சாந்தம் மற்றும் ஞானத்துடன் சான்றுபகரும் விருப்பத்தால் தன்னை எப்போதும் உருவாக்கிக்கொண்டார் என்றும், அவரது வாழ்நாள் முழுவதும் திருஅவை அவருக்கு வழங்கிய பணிகளை மிகவும் அர்ப்பணமுடன் செய்தார் என்றும் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை.

மேலும் பாசமுடன் நற்செய்தி மற்றும் திருஅவைக்கு முன்மாதிரியான அர்ப்பணிப்புடனும் மனச்சான்றுடனும் பணியாற்றியவர் மறைந்த கர்தினால் Ayuso என்று தெரிவித்துள்ள திருத்தந்தை, எகிப்து, சூடான் நாடுகளில் சிறந்த மறைப்பணியாளராகவும், மதங்களுடனான கலந்துரையாடலுக்கான திருப்பீடத்துறையின் தலைவராகவும் அவர் அர்ப்பணிப்புடன் பயணியாற்றிவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிச் சடங்கு

இதற்கிடையே நவம்பர் 27, புதன்கிழமை,  பிற்பகல் 2.00 மணிக்கு, அதாவது, இந்திய, இலங்கை நேரம் மாலை 06.30 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் மறைந்த கர்தினால் Ayuso அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

மேலும் கர்தினால் Giovanni Battista Re அவர்களின் தலைமையில் நிகழும் இந்த இறுதிச் சடங்குத் திருப்பலியில் கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்கள் கலந்துகொள்வர் என்றும், இறுதியில் இடம்பெறும் இறப்புச் செய்தி வழங்கும் நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வார் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2024, 12:23