தேடுதல்

வேலூர் மறைமாவட்ட புதிய ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து வேலூர் மறைமாவட்ட புதிய ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து 

வேலூர் மறைமாவட்ட புதிய ஆயர் அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து

திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குனர் மற்றும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் மறைபரப்பு பணிக்குழு செயலரான அருள்பணி முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்  

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து (58) அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வேலூர் மறைமாவட்ட ஆயராக நியமித்துள்ளார்.

நவம்பர் 9 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி தூய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்புப் பெருவிழாவன்று வேலூர் மறைமாவட்டத்திற்கான புதிய ஆயராக அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குனர் மற்றும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் மறைபரப்பு பணிக்குழு செயலரான அருள்பணி முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். 

1966ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தில் உள்ள செய்யூரில் பிறந்த அருள்தந்தை அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள், 1993ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று குருவாக அருள்பொழிவு பெற்றவர். லூவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முதுகலைப்பட்டத்தையும், உரோமில் உள்ள ஆஞ்செலிக்கம் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

சென்னை தூய சாந்தோம் பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாகவும், செங்கல்பட்டு தூய யோசேப்பு பேராலயம், ஒரகடம் திரு இருதய ஆலயம், படப்பை தூய சகாய அன்னை ஆலயம் போன்ற இடங்களில் பங்குத்தந்தையாகவும் சிறப்புடன் பணியாற்றியுள்ளார்.     

மறைமாவட்டப் பள்ளிகளின் கண்காணிப்பாளர், ஜீவன் ஜோதி இந்திய ஆட்சியாளர் உருவாக்க பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் (JEEVAN JYOTHI INDIAN ADMINISTRATIVE SERVICE) பூவிருந்தவல்லி திருஇருதயக் குருத்துவக் கல்லூரியின் துணை அதிபர், நூலகர், பேராசிரியர் என பல பணிகளை திறம்பட ஆற்றியவர்.

7ஆண்டுகளாக செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றியுள்ளார் அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2024, 13:20