தேடுதல்

வறியோர்களுடன் மதிய விருந்துண்ட திருத்தந்தை பிரான்சிஸ்

வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் ஏறக்குறைய 1300 பேருடன் மதிய உணவு உண்ட திருத்தந்தை அவர்கள் வறியோருடன் உரையாடி மகிழ்ந்து எட்டாவது அகில உலக வறியோர் நாளை சிறப்பித்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

எட்டாவது உலக வறியோர் நாளை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் வறியோர் ஏறக்குறைய 1300 பேருடன் மதிய உணவு உண்டார்.

நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 10.00 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் அகில உலக வறியோர் தினத்திற்கான திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பலிக்கு முன்னதாக ஃபாம்வின் வீடற்றவர்களுக்கான கூட்டமைப்பின் (FHA) உதவியால் யூபிலி ஆண்டை முன்னிட்டு 13 நாடுகளில் உள்ளவர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக 13 சாவிகளை ஆசீர்வதித்தார். 13 நாடுகளில் ஒன்றாக இருக்கும் சிரியாவிற்கு 13 இலவச வீடுகள் கட்டித்தருவதற்கான நிதி உதவியானது திருப்பீடத்திலிருந்து நேரடியாக வழங்கப்பட உள்ளது.

UnipolSai என்னும் அமைப்பின் தாராள நன்கொடை மற்றும் பலரது முயற்சியின் விளைவாகவும் இந்த புதிய செயல்திட்டமானது போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வர இருக்கும் யூபிலி ஆண்டு எதிர்நோக்கின் அடையாளமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நடைபெற உள்ளது.  

வறியோர் நாள் திருப்பலி மற்றும் வத்திக்கான் வளாகத்தில் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரை ஆகியவற்றுக்குப் பின் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் ஏறக்குறைய 1300 பேருடன் மதிய உணவு உண்ட திருத்தந்தை அவர்கள் வறியோருடன் உரையாடி மகிழ்ந்து இந்த நாளை சிறப்புச் செய்தார்.

பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத்துறை, புனித வின்சென்ட் மறைப்பணியாளர்கள் சபை, இத்தாலிய செஞ்சிலுவை சங்கத்தார் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தின் முடிவில் நலவாழ்வுப் பொருள்கள் அடங்கிய சிறு பையானது பரிசாக வறியோர்க்கு வழங்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2024, 14:43