தேடுதல்

திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச் செய்தி!

எதிர்நோக்கின் திருப்பயணிகளாக, அவரைச் சந்திக்க வெளியே செல்வோம்! அவர் தனது இதயக் கதவை நமக்குத் திறந்தது போல, நம்முடைய இதயக் கதவுகளை அவருக்குத் திறப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தையின் 'ஊர்பி எத் ஓர்பி' சிறப்புச் செய்தி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கான் வானொலியின் அன்பு உள்ளங்களே, உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள். நம் கடவுள் எவ்வளவு பேரன்பும் பேரிக்கமும் கொண்டு விளங்குபவர் என்பதை ஒவ்வொர் ஆண்டும் உலகிற்கு உரக்கச் சொல்கிறது இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. கடவுளின் இந்தப் பேரன்பும் பேரிக்கமும் உங்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்து விளங்கட்டும். ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா ஆகிய இரு முக்கிய நாள்களில், திருத்தந்தையர், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து, 'ஊருக்கும் உலகிற்கும்' எனப் பொருள்படும் ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi) என்ற சிறப்புச் செய்தி, மற்றும் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீர் வழங்கும் பழக்கம், 13-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை பத்தாம் கிரகோரி அவர்களின் தலைமைப்பணி காலத்தில் தொடங்கியது.

டிசம்பர் 25, புதன்கிழமை இன்று, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நாளில், பகல் 12 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து, (ஊர்பி எத் ஓர்பி) என்ற சிறப்பு செய்தி, மற்றும் வாழ்த்துக்களை வழங்கினார். திருத்தந்தையை நேரில்கண்டு, அவரது ஆசீரைப் பெறுவதற்காக கடும்குளிரையும் பொருள்படுத்தாது அதிகாலையிலேயே மக்கள் தங்களின் குழந்தைகளுடன் வந்து வரிசையில் நிறக்கத் தொடங்கிவிட்டனர். அதுவும் இவ்வாண்டு யூபிலி ஆண்டு என்பதால் வழக்கத்திற்கு மாறாகவே கூட்டம் வத்திக்கான் வளாகம் முழுவதும் நிரம்பி வழிகிறது. வளாகம் முழுதும் கண்கவர் வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது. மேலும் இது யூபிலி ஆண்டு என்பதால் வளாகத்திற்குள்ளும் வெளியும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு புதிய பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த அழானச் சூழலில், சரியாக பகல் 12 மணிக்கு திருத்தந்தை மேல்மாடத்திற்கு வந்ததும் திருப்பயணிகளின் கூட்டம் மகிழ்ச்சிபொங்க கரங்களை உயர்த்தி ஆர்ப்பரித்தது. அவர்களைக் கண்டு பேரானந்தம் கொண்ட திருத்தந்தையும் பதிலுக்குத் தனது திருக்கரங்களை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, 'ஊர்பி எத் ஓர்பி' எனப்படும் சிறப்புச் செய்தியை அவர்களுக்கு வழங்கத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஊர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தி

அன்பு சகோதரர் சகோதரிகளே! நம்மை வியப்பில் ஆழ்த்தும் மற்றும் முடிவுறாத மறைபொருள் இந்த இரவில் புதுப்பிக்கப்பட்டது. கன்னி மரியா கடவுளின் ஒரே திருமகனாகிய இயேசுவைப் பெற்றெடுத்தார், அவரை துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தினர். “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (காண். லூக்கா 2:6-14) என்று வானதூதர்கள் பாடியதுபோன்று, பெத்லகேமின் இடையர்கள் மகிழ்ச்சியில் நிறைந்து, அவரைக் கண்டுகொண்டனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற இந்த நிகழ்வு, உண்மையில் தூய ஆவியாருக்குப்  புதிய நன்றி செலுத்துகிறது. அதே அன்பு மற்றும் வாழ்வின் ஆவியானவர், மரியாளின் கருப்பையை பயனடையச் செய்து, அவருடைய மனித உடலிலிருந்து இயேசுவை உருவாக்கினார். இன்று, நம் காலத்தின் துன்பங்களுக்கு மத்தியில், மீட்பின் என்றுமுள வார்த்தை மீண்டும் ஒருமுறை உண்மையிலேயே மனுவுருவெடுத்து, “நான் உன்னை அன்புகூர்கின்றேன், நான் உன்னை மன்னிக்கிறேன்; என்னிடம் திரும்பி வா, என் இதயத்தின் கதவு திறந்திருக்கிறது!” என்று இவ்வுலகின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மொழிகிறது.

அன்பு சகோதரர் சகோதரிகளே, கடவுளின் இதயத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். அவரிடம் திரும்புவோம்! நம்மை அன்புகூரும் மற்றும் மன்னிக்கும் இதயத்திற்குத் திரும்புவோம்! அவரால் மன்னிக்கப்படுவோம்; அவருடன் ஒப்புரவை ஏற்படுத்துவோம்.

இயேசுவே மேய்ப்பரும் கதவும்

புனித பேதுரு பெருங்கோவிலில் நேற்று இரவு நான் திறந்த யூபிலியின் புனிதக் கதவின் பொருள் இதுதான். இந்தப் புனிதக் கதவு அனைவருக்காகவும் திறந்திருக்கும் மீட்பின் கதவாகிய இயேசுவைக் குறிக்கிறது. இரக்கத்தின் தந்தை நம் உலகத்தின் மத்தியில், வரலாற்றின் மத்தியில், நாம் அனைவரும் அவரிடம் திரும்புவதற்குகாகத்  திறந்துவிட்ட கதவுதான் இயேசு. நாம் அனைவரும் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்; தந்தையின் வீட்டிற்குத் திரும்புவதற்கு நமக்கு ஒரு மேய்ப்பரும் ஒரு கதவும் தேவை. இயேசுவே அந்த மேய்ப்பரும் கதவுமாக இருக்கின்றார்.

சகோதரர் சகோதரிகளே, அஞ்சாதீர்கள்!, அவரது கதவு திறந்திருக்கிறது, அது அகலமாகத் திறந்திருக்கிறது!  வாருங்கள்!  நாம் கடவுளோடு ஒப்புரவாவோம், அதன்பிறகு நம்மோடும், ஒருவர் ஒருவரோடும், ஏன் நம் எதிரிகளோடும் கூட நம்மால் ஒப்புரவாக்கிட முடியும். கடவுளின் இரக்கத்தால் அனைத்தையும் செய்ய முடியும். அது ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்க்கிறது; அது பிரிவின் ஒவ்வொரு சுவரையும் இடித்துத் தள்ளுகிறது; அது வெறுப்பையும் பழிவாங்கும் உணர்வையும் நீக்குகிறது. வாருங்கள் அவரிடம் போவோம்!

இயேசுதான் அமைதியின் கதவு. பலமுறை நாம் அந்தக் கதவின் நுழைவாயிலில்தான் நிற்கிறோம்; ஆனால் அதைக் கடக்க நமக்குத் துணிவு இல்லை, ஏனென்றால் அது நம் வாழ்க்கையை ஆன்ம பரிசோதனை செய்துபார்க்க நமக்கு சவால் விடுகிறது. அந்தக் கதவு வழியாக நுழைவது, ஒருபடி முன்னேறி, நமது சொற்பூசல்களையும், பிளவுகளையும் விட்டுவிட்டு, அமைதியின் இளவரசராத் திகழும் குழந்தையின் நீட்டிய கரங்களில் நம்மை முழுதும் சரணடைய அழைக்கிறது.

இந்தக் கிறிஸ்து பிறப்பு மற்றும் யூபிலி ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு தனிமனிதரையும், அனைத்து மக்களையும், நாடுகளையும், அந்தக் கதவு வழியாக நடக்கத் தேவையான துணிவைக் கண்டறியவும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக, ஆயுதங்களின் சத்தத்தை அடக்கவும், பிளவுகளைக் கடக்கவும் நான் அழைக்கிறேன்!

உக்ரைனில் அமைதி நிலவட்டும்

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் ஆயுதங்களின் சத்தம் ஓயட்டும்!  நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கு, பேச்சுவார்த்தைக்கான கதவைத் திறக்கவும், உரையாடல் மற்றும் சந்திப்புக்கான வழிகளைத் திறக்கவும் தேவையான துணிவு பிறக்கட்டும்!

மத்திய கிழக்கில் ஆயுதங்களின் சத்தம் ஓயட்டும்

மத்திய கிழக்கில் ஆயுதங்களின் சத்தம் ஓயட்டும்! பெத்லகேமின் தொட்டிலைப் பற்றி சிந்திக்கையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள கிறிஸ்தவச் சமூகங்களை நான் நினைக்கிறேன், குறிப்பாக காசாவில், மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கே போர் நிறுத்தம் ஏற்படட்டும், சிறைபிடிக்கப்பட்ட பிணையக்கைதிகள் விடுவிக்கப்படட்டும், பசி மற்றும் போரினால் சோர்வுற்றுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கப்படட்டும்.  இந்த முக்கியமான தருணத்தில்  லெபனோனில், குறிப்பாக தெற்கில் உள்ள கிறிஸ்தவச் சமூகத்திற்கும், சிரியாவில் உள்ளவர்களுக்கும் எனது உடனிருப்பை வெளிப்படுத்துகிறேன்.

பேச்சுவார்த்தை மற்றும் அமைதிக்கான கதவுகள் மோதல்களால் அழிக்கப்பட்ட பகுதி முழுவதும் திறக்கப்படட்டும்.  இங்கு நான் லிபிய மக்களைப் பற்றியும் நினைத்து, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளைத் தேட அவர்களை ஊக்குவிக்கிறேன்.

காங்கோ ஜனநாயகக் குடியரசு நலம்பெறட்டும்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் தட்டம்மை நோயால் மரணித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் குடும்பங்களுக்கும், அந்த நாட்டின் கிழக்கு மக்களுக்கும், மாலி, புர்கினா பாசோ,  நைஜர் மற்றும் மொசாம்பிக் மக்களுக்கும், மீட்பரின் பிறப்பு நம்பிக்கையின் புதிய வாழ்வைக் கொண்டுவரட்டும். முக்கியமாக, அங்கே ஆயுத மோதல்கள் மற்றும் பயங்கரவாதத்தின் துயரம், காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளால் ஏற்படும் மனிதாபிமான நெருக்கடிகள், உயிர் இழப்பு மற்றும் இலட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர்வுக்குக் காரணமாக அமைக்கின்றது.

ஆபிரிக்க நாடுகள் அமைதி பெறட்டும்

எனது எண்ணங்கள் ஆப்பிரிக்காவின் கொம்பு நாடுகளின் மக்களைப் பற்றியும் திரும்புகின்றன. அம்மக்கள் அமைதி, ஒன்றிப்பு மற்றும் உடன்பிறந்த உறவின் கொடைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென இறைவேண்டல் செய்கிறேன். சூடானின் குடிமக்கள் மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்கும், அங்குப் போர்நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும் அனைத்துலகச் சமூகத்தின் முயற்சிகளை உன்னதமான கடவுளின் மகன் நிலைபெறச் செய்யட்டும்.

மியான்மார் நாடு அமைதி பெறட்டும்

மியான்மார் நாட்டில் நிலவி வரும் ஆயுத மோதல் காரணமாகப் பெரும் அவதிக்குள்ளாகி வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கட்டும்.

ஹெய்ட்டி வெனிசுலா கொலம்பியா மாற்றும் நிக்கராகுவா நாடுகளில் அமைதி நிலவட்டும்

ஹெய்ட்டி, வெனிசுலா, கொலம்பியா மற்றும் நிக்கராகுவாவில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு, நீதியிலும் உண்மையிலும், கூடிய விரைவில் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிய, அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அரசியல் அதிகாரிகளையும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களையும் குழந்தை இயேசு ஊக்குவிக்கட்டும். குறிப்பாக, இந்த யூபிலி ஆண்டில், அரசியல் பிளவுகளைக் கடந்து பொது நலனை மேம்படுத்தவும், ஒவ்வொரு நபரின் மனித மாண்பை மதிக்கவும் அவர்கள் பணியாற்றட்டும்.

சைபிரசில் பிரிவினை சுவர்கள் தகர்க்கப்படட்டும்

கடந்த ஐம்பது ஆண்டுகளாக அரசியல் ரீதியாக சைப்ரஸ் தீவை பாதித்து, மனிதரை பிளவுபடுத்தியுள்ள பிரிவினையின் அனைத்துச் சுவர்களையும் தகர்த்தெறிவதற்கான வாய்ப்பாக இந்த யூபிலி ஆண்டு அமையட்டும். அனைத்து சைப்ரஸ் சமூகங்களின் உரிமைகள் மற்றும் மனித மாண்பிற்கு முழு மதிப்பளித்து பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய பரிமாற்ற உடன்படிக்கை தீர்வு காணப்படும் என்பது எனது நம்பிக்கையாக உள்ளது.

அனைவருக்காகவும் காத்திருக்கும் கடவுள்

நம் இருப்பின் அர்த்தத்தையும், எல்லா உயிர்களின் புனிதத்தையும் மீண்டும் கண்டுபிடிப்பதற்கும், மனித குடும்பத்தின் அடிப்படை மதிப்புகளை மீட்டெடுப்பதற்கும், நமக்காக மனுவுருவெடுத்த கடவுளின் என்றுமுள வார்த்தையாகிய இயேசு, நாம் உள்ளே நுழைய அழைக்கப்பட்ட பரந்த-திறந்த கதவாக இருக்கின்றார். அவர் நுழைவாயிலில் நமக்காகக் காத்திருக்கிறார். அவர் நம் ஒவ்வொருவருக்காகவும் காத்திருக்கிறார். குறிப்பாக மிகவும் வலுவற்றவர்களுக்காக அவர் காத்திருக்கிறார், போராலும் பசியாலும் துயருறும் அனைத்துக் குழந்தைகளுக்காகவும் காத்திருக்கிறார்,  தனிமை மற்றும் கைவிடப்பட்ட சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்ட வயதுமுதிர்ந்தோருக்காக அவர் காத்திருக்கிறார்.

பாதுகாப்பான புகலிடத்தைத் தேடும் முயற்சியில் தங்களின் வீடுகளை இழந்தவர்களுக்காக அல்லது தங்களின் சொந்த நாட்டைவிட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்காக அவர் காத்திருக்கிறார். வேலை இழந்தவர்கள் அல்லது வேலை கிடைக்காமல் தவிக்கும் அனைவருக்காகவும் அவர் காத்திருக்கிறார். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் கூட இன்னும் கடவுளின் குழந்தைகளாக இருக்கும் சிறைக் கைதிகளுக்காக அவர் காத்திருக்கிறார். இறைநம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்படுகிற அனைவருக்காகவும் அவர் காத்திருக்கிறார்.

நற்பணிகள் ஆற்றுவோருக்கு நன்றி

இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருநாளில், நன்மை செய்வதிலும், பிறருக்குச் சேவை செய்வதிலும், சாந்தமாகவும், உண்மையாகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிப்பதில் தவறில்லை. வருங்கால தலைமுறையை உருவாக்கும் பெரும் பொறுப்பைக் கொண்ட பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி நான் நினைக்கிறேன்.

நலப் பணியாளர்கள், ஒழுங்குப் படைகள் மற்றும் பிறரன்புப் பணிகளை ஆற்றும்  அனைத்து ஆண்களையும் பெண்களையும், குறிப்பாக, உலகெங்கிலும் உள்ள மறைப்பணியாளர்களைப் பற்றியும் நான் நினைக்கிறேன்.  கடினமான சூழலில் இருக்கும் பலருக்கு அவர்கள் ஒளியையும் ஆறுதலையும் தருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி கூறுவோம்.

பிறரின் கடன்களையும் குற்றங்களையும் மன்னிப்போம்

சகோதரர் சகோதரிகளே, இந்த யூபிலி ஆண்டு கடன்களை மன்னிக்க, அதிலும் குறிப்பாக ஏழை நாடுகளுக்கு சுமையாக இருக்கும் கடன்களை மன்னிக்க ஒரு வாய்ப்பாக அமையட்டும். இரவின் குளிரிலும் இருளிலும் பிறந்த இறைத்தந்தையின் மகன், நமக்குரியத்தை மன்னித்துவிட்டதால், நமக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை மன்னிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். அவர் நம்மைக் குணப்படுத்தவும் மன்னிக்கவும் வந்தார்.

இறைவனை நோக்கி இதயக்கதவுகளைத் திறப்போம்

எதிர்நோக்கின் திருப்பயணிகளாக, அவரைச் சந்திக்க வெளியே செல்வோம்!  அவர் தனது இதயக் கதவை நமக்குத் திறந்தது போல, நம்முடைய இதயக் கதவுகளை அவருக்குத் திறப்போம். அனைவருக்கும் அமைதியான மற்றும் இறையாசீர் நிறைந்த கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 December 2024, 15:25