திருத்தந்தையின் சிறப்பு மூவேளை செபவுரை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மறைச்சாட்சிகள் அனைவரும் பலவீனத்தினாலோ அல்லது ஒரு கருத்தியலைப் பாதுகாப்பதற்காகவோ கொல்லப்படவில்லை, மாறாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து அவர்கள் பெற்ற மீட்பின் கொடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தியாக மரணத்தை ஏற்றுக்கொண்டனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 26, வியாழக்கிழமை இன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கியசிறப்பு மூவேளை செபவுரையில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்புநிறைந்த சகோதரர் சகோதரிகளே, இன்று, கிறிஸ்து பிறப்பு விழா முடிந்த மறுநாளே, முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவானின் விழாவை இன்றைய வழிபாடு கொண்டாடுகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஸ்தேவான் மீது கல்லெறிதல் பற்றிய விவரம் திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படுகிறது (காண்க. திப 6:8-12; 7:54-60) என்றும், மேலும் அவர் இறக்கும் போது, தனது கொலையாளிகளுக்காக இறைவேண்டல் செய்வதைக் காட்டுகிறது என்றும் விளக்கினார்.
ஸ்தேவானில் வெளிப்படும் இயேசுவின் வாழ்வு
முதல் பார்வையில், ஸ்தேவான் உதவியற்ற முறையில் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவது போல் தோன்றினாலும், உண்மையில், ஓர் உண்மையான சுதந்திரமான மனிதராக, அவர் தனது கொலையாளிகளைக் கூட தொடர்ந்து அன்புகூர்ந்து, இயேசு சிலுவையில் செய்தது போல், அவர்களுக்காகத் தனது உயிரைக் கொடுக்கிறார் (காண்க. யோவான் 10:17-18; லூக்கா 23:34) என்பதையும், அவர்கள் மனந்திரும்பி, மன்னிக்கப்பட்டு, நிலைவாழ்வைப் பெறுவார்கள் என்பதையும் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. .
இந்த வழியில், "எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டும் (1 தீமோ. 2:4) மற்றும் யாரும் இழக்கப்படக்கூடாது (ஒப். யோவான் 6:39; 17:1-26) என்று பெரியதொரு விருப்பம் கொண்ட கடவுளுக்கு திருத்தொண்டர் ஸ்தேவான் ஒரு சான்றாகத் திகழ்கின்றார் என்பதைத் திருப்பயணிகளுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இயேசு தனது தந்தைக்கு சாட்சியாக இருக்கிறார், அவர் தனது ஒவ்வொரு குழந்தைக்கும் எப்போதும் நன்மையை மட்டுமே செய்ய விரும்புகிறார் என்றும், அவர் யாரையும் ஒதுக்காதவர், அவர்களைத் தேடுவதில் சோர்வடையாதவர் (ஒப். லூக்கா 15:3-7) மற்றும் அலைந்து திரிந்த பிறகு, மனந்திரும்பி அவரிடம் திரும்பும்போது அவர்களை மீண்டும் வரவேற்பதில் (காண். லூக்கா 15:11-32) மகிழ்வடைகிறார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
கொலையாளிகளை மன்னித்த மறைச்சாட்சியர்
நல்வாய்ப்பற்ற நிலையில், இன்றும் கூட, உலகின் பல பகுதிகளில், நற்செய்தியின் காரணமாக பல ஆண்களும் பெண்களும் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும், சில வேளைகளில் அவர்கள் மரணமடைகின்றனர் என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, ஸ்தேவானைப் பற்றி நாம் கூறியது அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும் என்றும் ஒப்பிட்டுக்காட்டினார்.
அவர்கள் பலவீனத்தினாலோ அல்லது ஒரு கருத்தியலைப் பாதுகாப்பதற்காகவோ கொல்லப்படவில்லை, மாறாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து அவர்கள் பெற்ற மீட்பின் கொடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தியாக மரணத்தை ஏற்றுக்கொண்டனர் என்று விவரித்த திருத்தந்தை, மற்றவர்களை விட மன்னிப்பு மற்றும் மீட்பின் தேவை அதிகம் உள்ள தங்கள் கொலையாளிகளின் நன்மைக்காக அவர்கள் அதை முதலில் செய்கிறார்கள் என்பதையும் திருப்பயணிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
நம் காலத்தின் மறைச்சாட்சியாக விளங்கும் அருளாளர் கிறிஸ்தியான் தெ செர்ஜ் அவர்கள், நமக்கு ஓர் அழகான எடுத்துக்காட்டை விட்டுச் சென்றார் என்று கூறிய திருத்தந்தை, அவரது ஆன்மிக விருப்ப ஆவணத்தில், உடனடியாக நிகழக்கூடிய அவரது மரணத்தை முன்னறிவித்து, அவர் தனது வருங்கால கொலையாளியை "கடைசி நிமிடத்தின் நண்பர்" என்று அழைத்தார், மேலும் நமது இறைத்தந்தைக்கு திருவுளமானால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்தக் கொலையாளிகளை, மீண்டும் நாம் விண்ணகத்தில் சந்திப்போம் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார் (Spiritual Testament, Algiers – Tibhirine, 1993-1994) என்றும் உரைத்தார்.
தன்னைக் கொல்லும் மனிதரையும் விண்ணகத்தில் காணவேண்டும் என்று அருளாளர் கிறிஸ்தியான் தெ செர்ஜ் அவர்களிடம் விளங்கிய அந்த அன்பு உங்களுக்குப் புரிகிறதா? என்று திருப்பயணிகளிடம் கேள்வி எழுப்பிய திருத்தந்தை, கடவுளின் அன்பு இப்படித்தான் வெளிப்படுகிறது என்றும், இது உலகைக் காப்பாற்றும் அன்பு! இந்த அன்பு நமக்கு அதிகம் தேவைப்படுகிறது என்பதையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
கேள்விகள் எழுப்பிச் சிந்திப்போம்
அனைவரும் கடவுளை அறிந்து மீட்படைய வேண்டும் என்று நான் விருப்பம் கொள்கிறேனா? என்னை துன்புறுத்துவோர் கூட நலம்பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேனா? இறைநம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்ட பல சகோதரர் சகோதரிகள் குறித்து நான் கவலைகொண்டு அவர்களுக்காக இறைவேண்டல் செய்கிறேனா? என்பன போன்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திக்கவும் திருப்பயணிகளுக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
அன்னை மரியாவின் துணையை வேண்டுவோம்
இறுதியில், மறைச்சாட்சிகளின் அரசியாகிய அன்னை கன்னி மரியா, உலக மீட்புக்கான நற்செய்தியின் துணிவுமிகு சாட்சிகளாக இருக்க நமக்கு உதவுவாராக! என்று கூறி, திருப்பயணிகள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது சிறப்பு மூவேளை செப உரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்