அமைதிக்கான தேடுதல் நம் எல்லாருடைய பொறுப்பு - திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமைதியின் அரசராம் கிறிஸ்துவின் பிறப்பிற்காகக் காத்திருக்கும் நாம், அமைதிக்கான தேடுதல் என்பது ஒரு சிலரின் பொறுப்பு அல்ல, நம் எல்லாருடைய பொறுப்பு என்பதை உணர்ந்து அமைதியின் கொடைக்காக செபிப்போம் என்றும், போரின் கொடிய செயல்களும் அலட்சியங்களும் மேலோங்கினால் மனித குலம் அனைத்தும் தோற்கடிக்கப்படும் என்பதை உணர்ந்து வாழவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போரினால் பாதிக்கப்படும் பகுதியில் வாழ்கின்ற மக்களுக்காக செபிக்க வலியுறுத்தினார்.
அண்மையில், சிறப்பிக்கப்பட்ட அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளுக்கிடையேயான அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தத்தின் 40வது ஆண்டு நினைவு தினமானது ஆயுதப் பயன்பாட்டை விடுத்து உரையாடல்களில் ஈடுபடும்போது நாம் நற்பாதையில் செல்கின்றோம் என்பதை அடையாளப்படுத்துகின்றது என்றும், திருஅவையின் ஈடுபாட்டால் அர்ஜென்டினா, சிலிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
லெபனோனில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்தை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட லெபனோன், இஸ்ரயேல் மக்கள் அனைவரும், இராணுவம் மற்றும் ஐநாவின் அமைதிப் படை போன்றவற்றின் விலைமதிப்பற்ற உதவியால், பாதுகாப்பாக விரைவில் தங்களது வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிறுவனங்கள் தங்கள் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுக்கவும், தேவையான சீர்திருத்தங்களைத் தொடரவும், பல்வேறு மதங்களுக்கு இடையே சகவாழ்வில் நாட்டின் பங்கை அமைதியை உறுதிப்படுத்தவும் லெபனோனில் குடியரசுத்தலைத் தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
போரினால் பாதிக்கப்படும் அனைத்து இடங்களிலும், காசா உட்பட அனைத்து இடங்களிலும் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பிணையக் கைதிகளாக இருக்கும் இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்படுதல் பற்றியும், அவர்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய மனிதாபிமான உதவிகள் பற்றியும் கூறினார்.
போரினால் துன்புறும் சிரியா துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பயங்கரமான போரினால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நலிவடைந்தவர்களே முதன்மையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மனிதகுலத்திற்கு எப்போதும் தோல்வியை மட்டுமேத் தரும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
போரினாலும் குளிரினாலும் மக்கள் துன்புறுகின்றனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உரையாடல், உடன்பிறந்த உணர்வு, நல்லிணக்கம் போன்றவற்றை நாட்டில் நிலவச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு பன்னாட்டுச் சமூகத்திடமும், நல்லெண்ணமுள்ள ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்வதாக எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்