தேடுதல்

பேராயர் எதுவார்த் புரோஃபிட்லிச், சே.ச. பேராயர் எதுவார்த் புரோஃபிட்லிச், சே.ச. 

புனிதர் நிலைக்கு உயரும் மறைச்சாட்சி பேராயர் புரோஃபிட்லிச், சே.ச.!

1931-ஆம் ஆண்டு முதல் 1942-ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை எஸ்தோனியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றிய பேராயர் எதுவார்த் புரோஃபிட்லிச், சே.ச. அவர்களின் மறைச்சாட்சியத்தை திருத்தந்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எஸ்தோனியாவில் பணியாற்றி, 1942-ஆம்  ஆண்டு சோவியத் யூனியனில் கொல்லப்பட்ட ஜெர்மனியில் பிறந்த சேசு சபை பேராயர் எதுவார்த் புரோஃபிட்லிச் (Eduard Profittlich) அவர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

டிசம்பர் 18, இப்புதனன்று, புனித பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்றும், மேலும் புனிதர்பட்ட படிநிலைகளில் இருக்கும் 21 பேரின் வீரத்துவ பண்புகளை ஏற்றுக்கொண்டு அதுகுறித்த ஆணைகளை வெளியிட அவருக்கு அதிகாரம் அளித்தார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

1931-ஆம் ஆண்டு முதல் 1942 -ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை எஸ்தோனியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றிய பேராயர் எதுவார்த் புரோஃபிட்லிச், சே.ச. அவர்களின் மறைச்சாட்சியத்தை திருத்தந்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சோவியத் யூனியன் அதிகாரிகள் எஸ்தோனியாமீது படையெடுத்து ஓராண்டு கழித்து பேராயர் புரோஃபிட்லிச் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் சைபீரியாவில் உள்ள சிறைக்கு நாடு கடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1942-ஆம் ஆண்டு பெப்ரவரி 22-ஆம் தேதியன்று, கிரோவ் சிறையில் அவரது தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இறந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2024, 12:10