உங்கள் வளங்களால் ஒருவரையொருவர் ஆதரியுங்கள்: திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகளாவிய திருஅவையின் மறைப்பணியாளர்கள் மற்றும் பிறரன்புப் பணிகளை ஆதரிப்பதற்கான உங்கள் அர்ப்பணிப்பு நற்செய்தி அறிவிப்பின் உறுதியான வெளிப்பாடாகும் என்றும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நமது சகோதரர் சகோதரிகள் பலருக்கு நற்செய்தியின் நம்பிக்கையை கொண்டு வர இது உதவும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 19, வியாழன் இன்று, அமெரிக்காவாழ் வியட்நாமிய வம்சாவளியின் கொடையாளர்கள் 65 பேரை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, திருத்தூதர்களின் காலத்திலிருந்தே, கிறிஸ்து என்ற திருவுடலின் அங்கத்தினர்கள் தங்கள் வளங்களால் ஒருவரையொருவர் ஆதரித்துள்ளனர் (காண்க. 2 கொரி 8:1-15) என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுடனான உங்கள் ஒன்றிப்பு, நம்மிடையே உள்ள சின்னஞ்சிறியவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற இறைவனின் கட்டளையை எதிரொளிக்கச் செய்கின்றது என்றும், மேலும் புனித பவுலடியார் நமக்கு நினைவூட்டுவது போல, அத்தகைய உதவியை மகிழ்ச்சியான இதயத்துடன் வழங்குவது முக்கியம் (காண்க. 2 கொரி 9 :7) என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
உங்களின் கொடுத்துதவும் செயல்கள் தொடர்ந்து மகிழ்ச்சியான மனதுடன் வழங்கப்படவும், உங்கள் தியாகங்கள் கிறிஸ்துவின் கனிவான அன்பையும் இரக்கத்தையும் அனுபவிக்கும் நம் சகோதரர் சகோதரிகளின் வாழ்க்கையில் பலனளிக்க வேண்டும் எனவும் நான் இறைவேண்டல் செய்கின்றேன் என்றும் அவர்களிடம் உரைத்தார் திருத்தந்தை.
வியட்நாமில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பல கத்தோலிக்கர்களின் தனிச்சிறப்பு என்பது, அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த வலுவான நம்பிக்கையாகும் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இது உங்கள் சொந்த நாடுகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள கிறிஸ்தவச் சமூகங்களுக்கு உதவ உங்கள் விருப்பத்தை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்