புலம்பெயர்ந்தவர் வரவேற்கப்பட வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புலம்பெயர்ந்தவர் வரவேற்கப்பட வேண்டும், உடன் செல்லல் வேண்டும், ஊக்கமளிக்கப்பட வேண்டும் மற்றும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
டிசம்பர் 11, புதன்கிழமை இன்று, ResQ எனப்படும் கடலில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மக்களைக் காப்பாற்றும் இலாப நோக்கற்ற அமைப்பின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களுக்கு வழங்கிய உரையொன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
உயிர்காக்க உதவும் உங்களின் இந்தத் தாராள மனப்பான்மை, இந்த உழைப்பு நற்செய்தியுடன் ஒத்துப்போகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இது அனைவருக்கும், குறிப்பாக ஏழை, மிகவும் கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, ஆபத்தில் உள்ள மக்களுக்கு நன்மை செய்யும்படி நம்மை அழைக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, மத்தியதரைக் கடலைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் பால்கன் வழித்தடத்தில் பயணிப்பவர்களுக்கு ஆதரவாக அவர்கள் மேற்கொள்ளும் சிறப்பான நடவடிக்கைக்காக அவர்களைப் பாராட்டுவதாகக் கூறிய திருத்தந்தை. இந்த ஆபத்தான பயணத்தில் அவர்களைக் காக்கவேண்டியது அவர்களின் இன்றியமையாத கடமையாகிறது என்றும் குறிப்பிட்டுக் காட்டினார்.
உங்கள் நிறுவனத்தால் தொடரப்பட்ட இந்த நடவடிக்கை உயிர்களைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விளக்கிய திருத்தந்தை, கடுமையான மோதல்கள் நிகழும் இடங்களிலிருந்து வெளியேறும் மக்களின் உயிர்கள், பெரும்பாலும் மனிதாபிமான நெருக்கடிகளைத் தூண்டும் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும் உரைத்தார்.
இந்த மக்களுக்கு நாம்தான் உதவ வேண்டும் என்று நினைப்பது, இந்த மனப்பான்மையின் அடிப்படையானது என்று தெரிவித்த திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் மற்றும் அவர்களின் மாண்பு மீற முடியாதது என்றும், அவர்களின் நாடு, நிறம், அரசியல் கருத்து அல்லது மதம் எதுவாக இருந்தாலும் இது பொருந்தும் என்பதையும் அவர்களுக்கு விளக்கினார்.
எதிர்பாராதவிதமாக, பல நேரங்களில் இது அவ்வாறு நடப்பதில்லை, மாறாக, பல உயிர்கள் சுரண்டப்படுகின்றன, நிராகரிக்கப்படுகின்றன, முறைகேடுகளுக்கு ஆளாகின்றன, அடிமைப்படுத்தப்படுகின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை, புலம்பெயர்ந்த நிகழ்வு பரந்த மற்றும் சிக்கலான தன்மையை எதிர்கொண்டாலும், குடிமுறை அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை முழுமையாகச் சந்திப்பதில் எப்போதும் வெற்றி பெறுவதில்லை என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, விடயங்களைக் கவனிக்காமல், தூரத்தில் இருந்து விமர்சிக்காமல், செயலில் ஈடுபட்டு, புலம்பெயர்ந்தோரின் துன்பத்தைப் போக்க, அவர்களைக் காப்பாற்ற, அவர்களை வரவேற்று, ஒருங்கிணைக்க, தங்கள் நேரத்தையும், கூர்மதியையும், வளங்களையும் வழங்கி, ஈடுபடுபவர்களின் செயலை வரவேற்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்