போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்குத் திருத்தந்தை மீண்டும் உதவி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு மீண்டும் உதவிப்பொருள்களை அனுப்பி வைத்துள்ளதன் வழியாக, தனது நெருக்கத்தையும் செபத்தையும் மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்துவந்த போதிலும் அதனைச் செயலில் காண்பிக்கும் விதமாக இந்த உதவிப் பொருள்களை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் திருத்தந்தை.
திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்கள், இந்த உதவிப் பொருள்களை எல்லாம் உக்ரைன் நாட்டிற்கு எடுத்துச் செல்கிறார் என்றும், அவருடன் ஒரு நடமாடும் தீவிர சிகிச்சை இயங்கு மருத்துவ ஊர்தியும், அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தக்கூடிய பெரிய காம்பர் வான், மற்றும் போர் காரணமாக சேதமடைந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஆறு உல்ட்ராசவுண்டு ஸ்கேனர்கள் ஆகியவை கொண்டு செல்லப்படுகின்றன.
உக்ரைன் செல்லும் கர்தினால் Krajewski அவர்கள், அதனின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து மக்களைச் சந்தித்து அவர்களின் உள்ளங்களில் நம்பிக்கையின் கதவை திறப்பார் எனவும், அவர்களின் அமைதியான வாழ்விற்காக இறைவேண்டல் செய்வார் எனவும் திருப்பீடத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பன்னிரண்டு சுமையுந்துகளில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கார்க்கிவ் நகரத்திற்கு உணவு, குழந்தை உணவு, தனிப்பட்ட நலப் பொருட்கள், உடைகள், மருந்து மற்றும் மற்ற அவசியத் தேவைகளும் அனுப்பிவைக்கப்பட்டன.
2022-இல் இரஷ்யா உக்ரைன்மீதான தாக்குதலைத் தொடங்கிய பிறகு, கர்தினால் Krajewski அவர்கள் அந்நாட்டிற்கு ஏழாவது முறையாகப் பயணம் செய்கின்றார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொருமுறையும் அவர் திருத்தந்தை வழங்கிய மருந்து பொருள்களையும், தீவிர சிகிச்சை இயங்கு மருத்துவ ஊர்தியையும் (ambulance equipped as a mobile intensive care unit), வத்திக்கான் மருந்தகத்திலிருந்தும், உரோமை நகரின் ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்தும் பரிசாகப் பெற்ற அவசியமான மற்றும் உயிர்காக்கும் மருந்துகளையும் கொண்டு சென்றார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்