தேடுதல்

சிரக்கூசேவில் புனித லூசியா பெருவிழாக் கொண்டாட்டம் சிரக்கூசேவில் புனித லூசியா பெருவிழாக் கொண்டாட்டம்  

புனித லூசியாவின் வாழ்வு மனித மாண்பை வெளிப்படுத்துகிறது!

அன்பான சிரக்கூசே விசுவாசிகளே, உலகெங்கிலும் துன்புறுத்தல் மற்றும் அநீதியால் துன்புறும் சகோதரர் சகோதரிகளை உங்களின் இந்த விழாவிற்கு அழைத்துவர மறவாதீர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித லூசியாவின் புனிதத்தன்மை உங்கள் தலத்திருஅவைக்கும் அனைத்துத் தலத்திருஅவைகளுக்கும்  இறைவனைப் பின்பற்றுவதற்கான சொந்த வழிகளைக் கற்பிக்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் சிரக்கூசே உயர்மறைமாவட்டத்தில் புனித லூசியாவின் பெருவிழா சிறப்பிக்கப்படும் வேளை, அதன் பேராயர் Francesco LOMANTO அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

உங்கள் மத்தியில் புனித லூசியா வருவதன் வழியாக, கடவுளின் மறைபொருள் உங்களில் வெளிப்படுகிறது என்றும், நீங்கள் ஆண்களாகவும், பெண்களாகவும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கடவுளின் மகள்களாகவும், மகன்களாகவும் இருப்பீர்கள் என்றும் எழுதியுள்ளார் திருத்தந்தை.

உங்களின் பாதுகாவலி புனித லூசியாவின் வாழ்வை நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தால், அது மனித மாண்பையும், தொலைநோக்குப் பார்க்கும் திறனையும் தீவிரமாக வெளிப்படுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும் என்றும், இதுவே கிறிஸ்தவப் பெண்களைச் சமூக வாழ்வின் மையத்திற்குக் கொண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுளளார்.

வெளியுலகத்தில் பயணிக்கும் திருஅவையில் இருக்கும் நமக்கு பெண்களின் சேவையும்  வார்த்தையும் தேவைப்படுகிறது, அது கலாச்சாரம் மற்றும் இணைவாழ்வில் புளிப்பு மாவாக மற்றும் ஒளியாகத் திகழ்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

புனித லூசியாவின் தியாகம் நமக்கு அழுகை, இரக்கம் மற்றும் மென்மையைக் கற்பிக்கிறது என்றும், இவை சிரக்கூசேவில் உள்ள அன்னையின் கண்ணீரால் உறுதிப்படுத்தப்பட்ட நற்பண்புகள் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

தெளிந்து தேர்தல் என்பது நம் ஒவ்வொருவரின் அழைப்பிலும் ஒளிரும் மையமாகும் என்பதையும், நமது பயணத்தில் புனிதர்கள் குறிப்பிடும் அழைப்புக்கான தனிப்பட்ட பதிலும் இதுதான் என்பதையும் புனித லூசியாவின் வாழ்விலிருந்து சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

அன்பான சிரக்கூசே விசுவாசிகளே, உலகெங்கிலும் துன்புறுத்தல் மற்றும் அநீதியால் துன்பப்படும் சகோதரர் சகோதரிகளை உங்களின் இந்த விழாவிற்கு அழைத்துவர மறவாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, உங்களுடன் இருக்கும் புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர் மற்றும் ஏழைகளையும் இவ்விழாவில் இணைத்துக்கொள்ளுங்கள் என்றும் தனது செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2024, 13:11