திருத்தந்தை பிரான்சிஸின் 47ஆவது திருத்தூதுப்பயணம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பிரான்சின் அழகிய தீவு என அழைக்கப்படும் கோர்சிகா தீவுப்பகுதிக்கு வருகை தரும் முதல் திருத்தந்தையாகத் திகழ்பவர் நமது திருத்தந்தை பிரான்சிஸ். ஏற்கனவே 2014ஆம் ஆண்டு ஸ்ட்ராஸ்புர்கோ மற்றும் 2023ஆம் ஆண்டு மர்சேல்ஸ் என்னும் பிரான்சின் பகுதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இருமுறை திருத்தூதுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் பிரான்சிற்கு மூன்றாவது முறையாகவும் கோர்சிகா தீவுப் பகுதிக்கு முதல் முறையாகவும் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார்.
எந்த ஒரு திருப்பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னரும் முடித்த பின்னரும் உரோம் நகரிலுள்ள மேரி மேஜர் பெருங்கோவில் சென்று செபிப்பதை வழக்கமாகக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருநாள் திருத்தூதுப் பயணமாக பிரான்சிஸ் கோர்சிகா தீவிற்கு செல்ல இருப்பதை முன்னிட்டு டிசம்பர் 14 சனிக்கிழமை மாலை அப்பெருங்கோவில் சென்று அன்னை மரியா திருவுருவப் படத்தின் முன் செபித்தார். மேலும் அங்கு கிறிஸ்து பிறப்பு காட்சிகளை தத்ரூபமாக நடித்துக்காட்டும் கலைஞர்களை ஆசீர்வதித்து வாழ்த்தினார்.
டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை காலை 7,15 மணிக்கு சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புறப்படுவதற்கு சில மணித்துளிகள் முன்பு உரோம் நகரைச் சுற்றி வாழும் வீடற்ற மக்கள் சிலரை சந்தித்தார். அவர்களுடன் திருப்பீடத்தின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski உடனிருந்து திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் சிறப்படைய வாழ்த்து தெரிவித்தார். சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து 29 கிமீ தூரம் காரில் பயணித்து உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்த திருத்தந்தை அவர்கள், A320 Neo என்னும் இத்தாலிய விமானத்தில் 359 கிமீ தூரம் 1மணி நேரம் 15 நிமிடங்கள் கொண்ட பிரான்சின் அஜாக்சியோ பன்னாட்டு விமான நிலையத்தை நோக்கிய தனது பயணத்தைத் துவக்கினார்.
விமானத்தில் பத்திரிக்கையாளர்கள், செய்தித்தொடர்பாளர்கள், ஒலிப்பதிவாளர்கள் என ஏறக்குறைய 70 பேரை உடன் அழைத்துச்சென்ற திருத்தந்தை அவர்கள், விமானத்தில் அவர்களைச் சந்தித்து அவர்களது பணிக்குத் தனது நன்றியினையும் தெரிவித்தார். மேலும் இத்தாலிய அரசுத்தலைவருக்கு தனது பயணம் குறித்த தந்திச்செய்தியினையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை. விமானத்திலேயே காலை உணவினை நிறைவுசெய்த திருத்தந்தை அவர்கள், பிரான்ஸ் உள்ளூர் நேரம் காலை 8.49 மணியளவில் அஜாக்சியோவில் உள்ள நெப்போலியன் போனபார்த்தே விமான நிலையத்தினை வந்தடைந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்