அஜாக்சியோ விமான நிலையத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
73,822 மக்களைக் கொண்ட அஜாக்சியோ (Cité Impériale) பேரரசர் நகரம் என அழைக்கப்படுகின்றது. கோர்சிகா என்பது மத்தியதரைக் கடலிலுள்ள ஒரு தீவு. இத்தீவு இத்தாலியின் வடக்கு பகுதியிலும் பிரான்சின் தென்கிழக்கு பகுதியிலும் உள்ளது. 8,680 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவின் அருகில் உள்ள நிலப்பரப்பு சார்தீனியா தீவு ஆகும். நெப்போலியன் போனபார்த்தே 1811 ஆம் ஆண்டில் அஜாக்சியோ நகரத்தை கோர்சிகா தீவின் தலைநகராக மாற்ற முடிவு செய்தார். லூயிஸ் XV இன் இராணுவம் தீவைக் கைப்பற்றிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, கோர்சிகன் நகரில் 1769 ஆகஸ்ட் 15, இல் பிறந்த பேரரசர் நெப்போலியன் உடனான தொடர்பு காரணமாக, அஜாக்சியோ "இம்பீரியல் நகரம்" என்ற செல்லப்பெயர் பெற்றது. இன்று இந்த நகரம் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் தீவின் பொருளாதார மையமாகவும் உள்ளது. நெப்போலியனின் வரலாற்றை எடுத்துரைக்கும் பல கண்காட்சிகளும் அருங்காட்சியகங்களும் இங்கு இன்று வரை பாதுகாக்கப்படுகின்றன. அஜாக்சியோ வளைகுடா அழகான கடற்கரைகள் மற்றும் கடலோர தங்கும் விடுதிகளால் வகைப்படுத்தப்படுகிறது.
உள்ளூர் நேரம் காலை 8.49 மணிக்கு விமான அஜாக்சியோ நெப்போலியன் போனபார்த்தே விமான நிலையத்தை வந்து சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிரான்சின் அப்போஸ்தலிக்க தூதுவரும் கனோசா உயர்மறைமாவட்ட பட்டம் சார் ஆயருமான பேராயர் Celestino Migliore மற்றும் சிலர் விமானத்திற்குள் சென்று வரவேற்றனர். விமான நிலையத்தில் பிரான்ஸ் உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் ஐரோப்பாவிற்கான அமைச்சர் ஆகியோர் திருத்தந்தையை வரவேற்க 4 சிறார் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். பாடல் இராணுவ அணிவகுப்பு, அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதன்பின் விமான நிலையத்தில் உள்ள Hall de Conférences என்னும் சிறப்பு விருந்தினர்களுக்கான அறையில் அவர்களை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார் திருத்தந்தை.
அதன்பின் அங்கிருந்து 7 கிமீ தூரம் காரில் பயணித்து Battistero paleocristiano என்னுமிடத்திற்கு வந்தார். திறந்த காரில் அஜாக்சியோ நகரத் தெருக்களில் மக்கள் நடுவே வலம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மக்கள் வாழ்த்துக்குரல் எழுப்பியும் பாடல் பாடியும் வரவேற்றனர். இளைஞர் ஒருவர் நம்பிக்கை அறிக்கையை செபிக்க பாடல்கள் பாடப்பட்டன. தெருக்களிலும் தொகுப்பு மாடிவீட்டு முற்றங்களிலும் சிறார், இளையோர், பெண்கள் முதியோர் என பல குழுக்கள் பாடல் இசைத்து திருத்தந்தையை வரவேற்க அவர்கள் அனைவரையும் அன்புடன் ஆசீர்வதித்து அங்கிருந்து மதங்கள் சார்ந்த மாநாட்டின் நிறைவில் பங்கேற்க சென்றார் திருத்தந்தை. பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் உட்பட மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளின் ஆயர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்றார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்