தாழ்ச்சியான இதயம் கொண்டு தன்னை தாழ்த்திய இயேசு
மெரினா ராஜ் - வத்திக்கான்
தாழ்மையான இதயம் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறது என்பதை குழந்தையாகப் பிறந்த இயேசுவின் வாழ்க்கை நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், கடவுளின் இயக்கத்தை நம்முடையதாக்குதல், அதை ஏற்றுக்கொள்ளுதல், வரவேற்றல் என்னும் கன்னி மரியின் செயல்களை நமதாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 21 சனிக்கிழமை வத்திக்கானில் உரோம் கூரியாவைச் சார்ந்தவர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரின் நன்மைகளைப் பேசுவோம் தீயவைகளை அல்ல என்ற கருப்பொருளில் தாழ்ச்சியின் பாதை, ஆசீர்பெற்றவர்கள் ஆசீரளிப்போம், அருளின் கைவினைஞர்கள் என்னும் மூன்று தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
உரோமன் கூரியா பல உழைக்கும் சமூகங்களைக் கொண்டது, சமூக வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் சிந்தனைக்கான உணர்வைக் கொண்டது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தாழ்ச்சி கிறிஸ்து பிறப்பின் மறைபொருள், தாழ்ச்சியின் வழியில் நடக்கும் திருஅவை சமூகம், மகிழ்ச்சியுடனும் உடன்பிறந்த உணர்வுடனும் வாழ்கிறது, தீய எண்ணங்களையும், மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதையும் களைகிறது என்றும் கூறினார்.
ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம் என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், இவ்வார்த்தைகள் நம்முடன் பணியாற்றுபவர்கள் பற்றிய நல்லதை எடுத்துரையுங்கள் தீயதை எடுத்துரைக்காதீர்கள் என்று அறிவுறுத்துவதாகவும் கூறினார்.
தாழ்ச்சியின் பாதை - நம் குறைகளைக் களைதல்
காசாவைச் சார்ந்த Doroteo என்னும் ஆன்மிகத்தந்தை அவர்களின் வார்த்தைகளான, "தாழ்மையான மனிதனுக்கு ஏதேனும் தீமை நேர்ந்தால், அவர் உடனடியாக தன்னைத்தானே திருப்பிக் கொள்கிறார், அவர் அதற்குத் தகுதியானவர் என்று தீர்ப்பளிக்கிறார், அவர் மற்றவர்களை குற்றம் சாட்டவோ அல்லது தீர்ப்பளிக்கவோ அனுமதிக்கவில்லை என்பதையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.
தாழ்ச்சியானது தொந்தரவு மற்றும் மனவேதனையின்றி, எல்லா சூழலிலும் அமைதியிலும் எளிமையாகத் தாங்குகிறது என்றும், தாழ்ச்சி யாரையும் தொந்தரவு செய்வதில்லை, எரிச்சலூட்டுவதில்லை என்ற ஆன்மிக குருவின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், பிறரது குறைகளை அல்ல மாறாக நமது குறைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
“உங்கள் அண்டை வீட்டாரின் தீமையை அறிய முற்படாதீர்கள், அவர் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள். மேலும் நமது தீய எண்ணம் அவைகளை உண்டாக்கினால், அவற்றை நல்ல எண்ணங்களாக மாற்ற முயலுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தன்னிடம் உள்ள குற்றத்தைக் கண்டறிவது, தன்னைக் குற்றம் சாட்டுவது ஒரு இன்றியமையாத வழிமுறை என்றும் எடுத்துரைத்தார்.
தன்னலத்திற்கு இல்லை என்றும் தூய ஆவியின் சமூகத்திற்கு ஆம் என்றும் கூறி வாழ வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தங்களது குற்றங்களைக் கண்டறிந்து களைய முற்படுபவர்கள், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையிலிருந்து விடுபட்டு, இதயங்களின் ஒற்றுமையை உருவாக்கும் ஒரே கடவுளின் செயலுக்கு இடமளிக்கிறார்கள் என்றும் கூறினார்.
தாழ்மையான இதயம் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறது என்பதை குழந்தையாகப் பிறந்த இயேசுவின் வாழ்க்கை நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், கடவுளின் இயக்கத்தை நம்முடையதாக்குதல், அதை ஏற்றுக்கொள்ளுதல், வரவேற்றல் என்னும் கன்னி மரியின் செயல்களை நமதாக்க வலியுறுத்தினார்.
தேவையற்ற அரட்டை தீமையானது, அது நமக்கு எதையும் கொண்டுவருவதில்லை, பூஜ்ஜியம் போன்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பாவ மன்னிப்பு அருளடையாளம் நாம் தாழ்ச்சியில் வளரவும் இறையியல் நல்லொழுக்கத்தில் வளரவும் வழிவகுக்கின்றது என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்