தேடுதல்

நமது மகிழ்ச்சியின் ஊற்று கிறிஸ்துவே – திருத்தந்தை

கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது கவலையற்ற, மேலோட்டமான, திருவிழா மகிழ்ச்சி அல்ல. மாறாக, ஓர் உறுதியான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட இதயத்தின் மகிழ்ச்சி

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிறிஸ்து நம் மகிழ்ச்சியின் ஊற்று. நம்மைச் சுமந்து கொண்டு, மகிழ்ச்சியைத் தருவதற்காக, நமது துன்பத்தில் அவர் நம்முடன் இருக்கிறார் என்றும், கிறிஸ்து நம்மோடு இருக்கிறார், நம்மோடு நடக்கிறார் என்ற இந்த உறுதியை எப்போதும் நம் இதயங்களில் வைத்திருப்போம். மகிழ்ச்சியாக இருப்போம், மற்றவர்களையும் மகிழ்வித்து சான்று வாழ்வு வாழ்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை தனது 47 ஆவது திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நிகழ்வாக அஜாக்சியோவில் உள்ள நெப்போலியன் தோட்டம் எனப்படும் Place d’Austerlitz எனப்படும் இடத்தில் நடைபெற்ற திருப்பலியின்போது ஆற்றிய மறையுரையில் இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மெசியாவின் வருகையை திருமுழுக்கு யோவான் மக்களுக்கு அறிவிக்கிறார், அவரது போதனையைக் கேட்பவர்கள், மெசியாவுடனான சந்திப்பிற்காக, இயேசுவுடனான சந்திப்புக்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்றும், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்கும்  கேள்வியானது வாழ்க்கையைப் புதுப்பிப்பதையும், அதை சிறப்பாக மாற்றுவதற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது. என்று கூறினார் திருத்தந்தை.

பாவிகள் என்று கருதப்பட்டவர்கள் நேர்மையற்ற மற்றும் வன்முறை நடத்தையிலிருந்து ஒரு புதிய வாழ்க்கைக்கு மாற விரும்புகிறார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கிறிஸ்து நமக்கு நெருக்கமாக இருக்கும்போது தொலைதூரமானது அனைத்தும் மிக நெருக்கமாகிறது என்றும் கூறினார்.

நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியை துணிவுடனும் பயமின்றியும் நாம் கேட்க வேண்டும் என்றும், உண்மையுடன் தாழ்ச்சியுள்ள மற்றும் நம்பிக்கையுள்ள இதயம் கொண்டவர்களாக இறைவனை வரவேற்பவர்களாக நாம் மாற வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், சந்தேகத்திற்கிடமான காத்திருப்பு, மகிழ்ச்சியான காத்திருப்பு என்னும் இரண்டு தலைப்புக்களில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.    

திருப்பலியின்போது திருத்தந்தை பிரான்சிஸ்
திருப்பலியின்போது திருத்தந்தை பிரான்சிஸ்

சந்தேகத்திற்கிடமான காத்திருப்பு

சந்தேகத்திற்கிடமான காத்திருப்பு, அவநம்பிக்கை மற்றும் பதட்டம் நிறைந்தது. சுயநல எண்ணங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மனம் உள்ளவர்கள் ஆன்மாவின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள் என்றும், நம்பிக்கையுடன் கண்காணிப்பதற்குப் பதிலாக, எதிர்காலத்தை சந்தேகக்கண்கொண்டு பார்க்கின்றனர், உலகத் திட்டங்களில் சிக்கிய அனைவரும், இறைத்திருவுளத்திற்கான பணிக்காகக் காத்திருப்பதில்லை. தூய ஆவியார் நமக்குத் தரும் நம்பிக்கையுடன் எப்படிக் காத்திருப்பது என்று அவருக்குத் தெரியவில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை மனதில் கொள்வோம் ஏனெனில், கவலை நம்மை ஆட்கொள்ளும் போது, ​​ நம்மை அது அழித்துவிடுகின்றது என்றும், உடல் வலி, குடும்பத்தில் ஏற்படும் சில பேரிடர்களால் ஏற்படும் வலி வேறு, கவலை என்பது வேறு என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவர்கள் வேதனை, வருத்தம், ஏமாற்றம், கவலை, சோகத்துடன் வாழக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

நுகர்வுக் கலாச்சாரத்தை நம்பி வாழும் சமூகம் நிறைவு அடையாமல் முதுமை அடைகின்றது. ஏனெனில் கொடுத்து வாழ்தல் என்பதை அறியாதது என்றும், தனக்காக மட்டும் வாழும் மனிதன் ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.

நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் என்ற இறைவார்த்தைக்கேற்ப,  செபமாலை செபித்தல், செப வழிபாடுகள், நற்செய்திப் பகிர்வுகள் போன்றவை இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, மரியாவின் தியானப் பார்வையில் நம் இதயங்களை வைத்திருக்க கற்றுக்கொடுக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

திருப்பலியில் பங்கேற்ற மக்களில் ஒரு பகுதி
திருப்பலியில் பங்கேற்ற மக்களில் ஒரு பகுதி

மகிழ்ச்சியானக் காத்திருப்பு

கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது கவலையற்ற, மேலோட்டமான, திருவிழா மகிழ்ச்சி அல்ல. மாறாக, ஓர் உறுதியான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட இதயத்தின் மகிழ்ச்சி என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இறைவாக்கினர் செப்பனியா வலியுறுத்துவதுபோல, உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; என்ற மகிழ்வில் நாம் வாழ வலியுறுத்தினார்.

கடவுள் நமது வாழ்வின் எல்லா சூழல்களிலும் நம்முடன் இருக்கின்றார், கல்வி கற்பித்தல், முதியவர்களுக்கு உதவுதல், நண்பர்களுடன் உரையாடுதல் என எல்லா சூழலிலும் நேரத்திலும் கடவுள் நம் மத்தியில் இருக்கின்றார் என்றும் பிறரைப் பற்றி புறணி பேசும் இடத்தில் கடவுள் இருப்பதில்லை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கடவுளின் வருகை நமக்கு மீட்பைத் தருகின்றது இதுவே நமக்கு மகிழ்ச்சிக்கான காரணம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடவுள் ஆற்றல் மிக்கவர், நமது மகிழ்ச்சி என்பது மீட்பராம் கிறிஸ்து இயேசுவில் நாம் கொண்ட நம்பிக்கையில் விளைந்த தூய ஆவியின் கனி என்றும் சுட்டிக்காட்டினார்.

இயேசு நம் இதயங்களை சோகம் மற்றும் சலிப்பிலிருந்து விடுவிக்கிறார், அவரின் வருகையானது அனைத்து மக்களுக்கும் எதிர்காலம் நிறைந்த ஒரு விருந்தாக மாறுகிறது என்றும், இயேசுவோடு இணைந்து வாழும் நாம், உண்மையான மகிழ்ச்சியைக் கண்டறிந்து, உலகம் காத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளங்களைத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2024, 11:45