மத்திய கிழக்கு பகுதிகளில் அமைதி நிலவ செபிப்போம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆயுதங்கள் எழுப்பும் சத்தங்கள் அமைதியாகட்டும், எங்கும் கிறிஸ்து பிறப்பு பாடல்கள் ஒலிக்கட்டும் என்றும், கிறிஸ்துபிறப்புக் காலத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உக்ரைன், புனித பூமி மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் எல்லாம் அமைதி நிலவட்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் வழங்கிய செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மொசாம்பிக்கில் நிலவும் சூழலை அதிக கவனத்துடனும் அக்கறையுடனும் அறிந்துவரும் சூழலில் அம்மக்களுக்கு எதிர்நோக்கு, அமைதி மற்றும் நல்லிணக்க செய்தியை புதுப்பிக்க விரும்புவதாகவும், நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தால் நிலைத்திருக்கும் உரையாடலும் பொது நன்மைக்கானத் தேடலும், அவநம்பிக்கை மற்றும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து வெற்றிபெற வேண்டும் என்று செபிப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.
துன்புறும் உக்ரைன் நகரங்கள் மீதான தாக்குதல்களால் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, பள்ளிகள், மருத்துவமனைகள், ஆலயங்கள் சேதப்படுத்தப்படுகின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பொதுமக்களுக்கு அதிக பாதிப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தும் போர் விரைவில் நிறுத்தப்படவேண்டும் என்றும் கூறினார்.
காசாவில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவீச்சுக்களினால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு எதிரான இச்செயல்கள் அனைத்தும் மிகக் கொடுமையானவை என்றும் கூறினார்.
உரோம் மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், வத்திக்கானின் சாந்தா மார்த்தா மருந்தகத்தில் இருந்து தன்னைக் காண வந்திருந்த குழந்தைகள் அன்னையர் அவர்களை அழைத்து வந்த வின்சென்சோ சபை அருள்சகோதரிகள் அனைவரையும் நினைவுகூர்ந்து வாழ்த்தினார்.
குடிலில் வைக்கப்பட இருக்கும் குழந்தை இயேசுவை ஆசீர்வதித்த திருத்தந்தை அவர்கள் மிகவும் எளிய அடையாளமான இச்செயல் மிக முக்கியமானது என்று கூறி ஒவ்வொருவரின் இதயம், குடும்பம், பெற்றோர், முதியோர் என எல்லாரையும் ஆசீர்வதிப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்