உரையாடலை வலியுறுத்தும் திருக்குடும்பம் – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
யோசேப்பு, மரியா, இயேசுவைக் கொண்ட திருக்குடும்பம் குடும்பங்களின் மாதிரியாகக் கருதப்படுவதற்கானக் காரணம் அக்குடும்பத்தில் உரையாடல் இருந்தது என்றும், ஒருவர் மற்றவருக்கு செவிசாய்க்கும் குடும்பமாக அது இருந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்பப் பெருவிழாவன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையாடல் இல்லாத, ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ளாத குடும்பம், மகிழ்ச்சியான குடும்பமாக இருக்க முடியாது என்றும் எடுத்துரைத்தார்.
பன்னிரண்டு வயதில் எருசலேம் ஆலயத்தில் காணாமல் போன இயேசு மறைநூல் அறிஞர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்த நிகழ்வு குறித்த நற்செய்திப் பகுதிக்கான விளக்கத்தைத் திருப்பயணிகளுக்கு வழங்கிய திருத்தந்தை அவர்கள், குடும்பங்களில் நிலவும் அமைதியான தருணங்கள் மற்றும் வியக்கத்தக்கத் தருணங்களையும், பதின்பருவத்தில் இருக்கும் ஒரு சிறுவனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள இயலாத பெற்றோரின் நிலையினையும் இந்நிகழ்வு எடுத்துரைப்பதாகக் கூறினார்.
குடும்பம், காலச்சூழல், நெருக்கடி, பெற்றோர்களின் நிலை என குடும்பத்தில் நிலவும் பல்வேறு சூழல்களை எடுத்துரைக்கும் இந்நிகழ்வானது உரையாடல், ஒருவர் மற்றவருக்கு செவிசாய்த்தல், பேசுதல் என்னும் குடும்பத்திற்குத் தேவையானவற்றை சுட்டிக்காட்டுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
ஒரு தாயானவர் தனது பிள்ளையைக் கண்டிக்காமல் கேள்வியுடன் தொடங்கும் உரையாடல் மிக அழகானது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அன்னை மரியா இயேசுவின் மேல் குற்றம் சாட்டவில்லை, தீர்ப்பளிக்கவில்லை, மாறாக தனது பிள்ளையை உரையாடல் வழியாக எப்படி வரவேற்று புரிந்துகொள்வது என முயற்சிக்கின்றார் என்றும் கூறினார்.
நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று இயேசு சொன்னதை பெற்றோர்களான யோசேப்பும் மரியாவும் புரிந்து கொள்ளவில்லை என்று நற்செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது திருக்குடும்பத்தில் புரிந்துகொள்ளுதலை விட செவிசாய்த்தலுக்கு அதிக முக்கியம் கொடுக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
செவிசாய்த்தல் என்பது பிறருக்கு முக்கியத்துவம் கொடுத்தல், அவர்களின் உரிமைகளை மதித்தல், சுயமாக சிந்தித்து அவர்களுக்குரிய மாண்பினை அளித்தல் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், பிள்ளைகள் இத்தகைய தேவைகளை உடையவர்களாக இருக்கின்றார்கள் என்றும், பெற்றோர்கள் பிள்ளைகளின் இந்தத் தேவைகளை நிறைவுசெய்பவர்களாக இருக்கின்றார்களா? என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார்.
குடும்பத்தில் உரையாடல் மற்றும் செவிசாய்த்தலுக்கான மிக அருமையான நேரம் ஒன்றாக இணைந்து உணவு உண்ணும் நேரமே என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒன்றாக இணைந்து மகிழ்ந்து உரையாடி உணவு உண்ணுதல் மிக நல்லது என்றும், பல பிரச்சனைகளை இது தீர்க்கும், தாத்தா, பாட்டி பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உரையாடுவது தலைமுறை இடைவெளியை நீக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
நமக்குள் நாமே மூடிக்கொண்டு யாரிடம் பேசாமல் இருப்பது நல்லதல்ல அதிலும் அலைபேசியோடு இருப்பது மிகவும் தீங்கானது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பேசுதல், செவிசாய்த்தல் ஆகியவற்றைக் கொண்ட உரையாடல் நமது வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் உதவும் என்றும் கூறினார்.
இயேசு, அன்னை மரியா மற்றும் யோசேப்பைக் கொண்ட குடும்பம் புனிதமானது, இயேசுவின் வார்த்தைகளை அவரது பெற்றோர்கள் புரிந்து கொள்ளாத போதும் அக்குடும்பம் தூயதாக திருக்குடும்பமாக திகழ்ந்தது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சில சமயங்களில் நமது குடும்பத்திலும் இதுபோன்று ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத சூழல் ஏற்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.
நாம் ஒருவர் மற்றொருவருக்கு செவிசாய்க்கின்றோமா? ஒருவரையொருவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு பிரச்சினைகளைச் சமாளிக்கிறோமா அல்லது அமைதியாக மனக்கசப்பில், பெருமிதத்தில் நம்மை நாமே மூடிக்கொள்கிறோமா? உரையாடலுக்கு நேரம் ஒதுக்குகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்தார்.
திருக்குடும்பப் பெருவிழாவாகிய இன்று ஒருவர் மற்றொருவருக்கு எவ்வாறு செவிசாய்ப்பது என்பது பற்றி திருக்குடும்பம் நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், கன்னி மரியாவிடம் நமது குடும்பங்களை அர்ப்பணித்து உரையாடல் என்னும் கொடையினைக் கேட்போம் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், மூவேளை செப உரைக்குப் பின் தனது ஆசீரை திருப்பயணிகளுக்கு வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்