தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

எதிர்நோக்கு என்பது ஓர் இறையியல் நல்லொழுக்கம்

எதிர்நோக்கு மற்றும் இரக்கச்செயல்கள் நற்செய்தியின் இதயத்தைத் தொட்டு, நம் நல்வாழ்விற்கு வழிகாட்டும் வழியைச் சுட்டிக்காட்டுகின்றன. - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

எதிர்நோக்கு என்பது நம்பிக்கை மற்றும் இரக்கச் செயல்களுடனான ஓர் இறையியல் நல்லொழுக்கம் என்றும், இந்த  யூபிலி ஆண்டில் மற்றவர்களுடன் உறவு கொள்வதற்கான அன்பின் வடிவமாக இரக்கச் செயல்களை பயிற்சித்து வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 28 சனிக்கிழமை BBC எனப்படும் செய்தி நிறுவனத்தின் இன்றைய நாள் சிந்தனை என்னும் நிகழ்விற்கு வழங்கிய செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்நோக்கு மற்றும் இரக்கச்செயல்கள் என்னும் தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.    

தாழ்ச்சி மிகவும் முக்கியமானது, மனத்தாழ்ச்சி உரையாடலுக்கு முன்னுரிமை அளிக்கிறது, தவறான புரிதல்களை சமாளிக்க உதவுகிறது, மற்றும் நன்றியுணர்வை உருவாக்குகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளரான Gilbert Keith Chesterton என்பவரின் சுயசரிதையில் அவர் குறிப்பிட்டுள்ள "வாழ்க்கையின் விடயங்களை நன்றியுணர்வுடன் எடுத்துக் கொள்ளுங்கள், அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

எதிர்நோக்கு மற்றும் இரக்கச்செயல்கள் நற்செய்தியின் இதயத்தைத் தொட்டு, நம் நல்வாழ்விற்கு வழிகாட்டும் வழியைச் சுட்டிக்காட்டுகின்றன என்றும், எதிர்நோக்கு மற்றும் இரக்கச்செயல்கள் நிறைந்த உலகம் அழகானது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

மனிதாபிமானம் என்பது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்ற, மக்களை மரியாதையுடனும் இரக்கத்துடனும் நடத்துகின்ற ஒரு சமூகம் என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், டிசம்பர் 24 அன்று நாம் தொடங்கியுள்ள யூபிலி ஆண்டானது எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

நாளை என்ன நடக்கும் என்று தெரியாவிட்டாலும், எதிர்காலத்தை அவநம்பிக்கையோடும் இழப்போடும் பார்ப்பது நமக்குப் பலன் அளிக்காது என்றும், போர்கள், சமூக அநீதிகள், ஒவ்வொரு நாளும் நாம் அனுபவிக்கும் பல வகையான வன்முறைகள் நம்மை சந்தேகம் மற்றும் ஊக்கமின்மையின் சோதனைக்குள் இழுத்துவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார் திருத்தந்தை.

அன்பை நாம் தேர்ந்துகொள்ளும்போது நம் இதயங்கள் ஆர்வமுள்ளதாகவும் நம்பிக்கையுள்ளதாகவும் மாறுகின்றது என்றும்,  அன்பு செய்பவர்கள், ஆபத்தான சூழ்நிலைகள் இருந்தாலும், எப்போதும் எதிர்நோக்கின் மென்மையான பார்வையுடன் உலகைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இரக்கம் என்பது அரசியல் அணுகுமுறையோ, சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவோ அல்லது பிற நன்மைகளைப் பெறவோ பின்பற்ற வேண்டிய அணுமுறையோ அல்ல மாறாக, எல்லோரையும் வரவேற்க இதயங்களைத் திறக்கின்ற, அனைவருக்கும் மிகவும் தாழ்ச்சியாக இருக்க உதவுகின்ற அன்பின் வடிவம் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2024, 13:29