எதிர்நோக்கு இறைவனின் முதல் கொடை - திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
இசையானது மனிதனின் இதயத்தோடு நேரடியாக பேசக்கூடியது, ஒற்றுமையையும் ஒன்றிப்பையும் நம்மில் உருவாக்கக்கூடியது என்றும், எதிர்நோக்கு இறைவனின் முதல் கொடை என்பதைக் கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு நினைவூட்டுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 14 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் கிறிஸ்துமஸ் பாடல் போட்டி 2024 இல் ("Christmas Contest" 2024) பங்குபெறும் உறுப்பினர்கள் ஏறக்குறைய 200 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி மற்றும் எதிர்நோக்கு என்னும் இரண்டு தலைப்புக்களின்கீழ் அவர்களுக்குத் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
அமைதி
இயேசு இவ்வுலகில் பிறந்த அந்த அமைதியான இரவில் விண்ணகத் தூதர் பேரணி வானதூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்து விண்ணையும் மண்ணையும் மகிழ்ச்சியால் நிரப்பியது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான வழியில் உரையாடும் இசை, மனிதனின் இதயத்தோடு நேரடியாக பேசக்கூடியது, ஒற்றுமையையும் ஒன்றிப்பையும் நம்மில் உருவாக்கக்கூடியது என்றும் எடுத்துரைத்தார்.
கிறிஸ்துமஸ் பாடல் போட்டி மற்றும் இசைக்கச்சேரியில் பங்குபெறும் அனைவரும்"அமைதியின் தூதர்களாக இருக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், கலை மற்றும் வாழ்க்கையுடன், செல்லும் இடங்களிலெல்லாம் உடன்பிறந்த உணர்வு மற்றும் நல்லிணக்க கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் தங்களது திறமைகளை முடிந்தவரை அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எதிர்நோக்கு
எதிர்நோக்கு என்ற கருப்பொருளில் தங்களது இசைக்கச்சேரியை நடத்தும் அவ்வுறுப்பினர்களுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், சான்றுள்ள கலைவாழ்வு மற்றும் தனிவாழ்வு வழியாக உலகில் உள்ள எண்ணற்ற இளையோருக்குப் பணியாற்றும் சலேசிய சபை மறைப்பணியாளர்களையும் நினைவுகூர்ந்து வாழ்த்தினார்.
கிறிஸ்து பிறப்பு எதிர்நோக்கு இறைவனின் முதல் கொடை என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது என்றும், நம்பிக்கையினால் அடித்தளமிடப்பட்டு பிறரன்புப் பணிகளால் அது வளர்க்கப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
எதிர்நோக்கானது ஒருபுறம் இறைவனுடனான உறவு என்னும் வளமான மண்ணில் தனது வேர்களை ஊன்றுவதாகவும், மறுபுறம், தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பினால் வளர்ந்து செழித்து, புதியவற்றிற்கு தன்னைத் திறந்து நிகழ்காலத்தைப் புது அர்த்தத்துடன் நிரப்புவதாகவும் இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
அமைதியும் எதிர்நோக்கும்
அமைதி மற்றும் எதிர்நோக்கு என்னும் இரண்டு ஓசைகளால் உலகின் தெருக்களை நிரப்பவும், எதிர்கால சந்ததியினருக்கு அவற்றைக் கொடுக்கவும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏராளமான மக்கள் இசையின் வழியாக இதனைப் பெற்றுக்கொள்ளக் காத்திருக்கின்றார்கள் என்றும், இப்போட்டியில் பங்குபெறும் இளையோர் தலைமுறைகளுக்கு இடையே ஒரு நல்லொழுக்கமுள்ள மற்றும் ஆரோக்கியமான ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் அடையாளமாக இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.
பாடகர்களின் திறமை, இலட்சியம், படைப்பாற்றல், தன்னையேக் கொடுக்கும் திறன், நீதி மற்றும் உடன்பிறந்த உணர்வின் மேல் உள்ள ஆர்வம் போன்றவை உலகம் மற்றும் திருஅவைக்கு மிக முக்கியமாகத் தேவை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அவர்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைக் கூறி உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்