இதயத்தின் புன்னகையுடன் பணியாற்றுங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
வத்திக்கான் நகரம் மற்றும் உலகளாவிய திருஅவையின் நலனுக்காக உழைக்கும் வத்திக்கான் பணியாளர்களுக்கு நன்றி என்றும், தொடர் வேலைகளிலும் எப்போதும் இதயத்தின் புன்னகையுடன் பணியாற்றவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 21 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் வத்திக்கான் திருப்பீடத்துறைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரைச் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறியபோது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணி, குடும்பம் என்னும் இரண்டு தலைப்புக்களின் கீழ் அவர்களுக்குத் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
பணி:
வத்திக்கானின் பல்வேறு திருப்பீடத்துறைகள் வழியாக வத்திக்கான் நகரத்திற்கு இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவரும் தேன்கூட்டில் இருப்பது போன்ற உணர்வுடன் சுறுசுறுப்புடன் பணியாற்றுகின்றார்கள் என்றும், தொடர்ச்சியான பணிகள் இருப்பினும் இதயத்தில் புன்னகையுடன் பணியாற்றுபவர்களாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இதயத்தின் புன்னகை என்பது இப்புன்னகையை யார் மற்றவர்களுடன் உருவாக்குகின்றார்கள் மற்றும் எல்லாருடைய நன்மைக்காக பிறருக்கு ஏதாவது செய்தல் என்னும் இரண்டு அழகினைக் கொண்டுள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசு இதனை தனது வாழ்வில் வெளிப்படுத்தியவர் என்றும் கூறினார்.
இறைமகனான இயேசு, நம்மீது கொண்ட அன்பின் காரணமாக சாதாரண தச்சனின் மகனாகப் பிறந்தார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், தச்சர் பட்டறையில் இயேசு பலவிதமான கைவினைப் பொருள்களை உருவாக்கினார். கைவினைஞராகிய அவராலேயே இவ்வுலகில் மீட்பு கட்டியெழுப்பப்பட்டது என்றும் கூறினார்.
நாசரேத்து என்னும் மறைவான ஊரில் பிறந்து வளர்ந்த இயேசு இவ்வுலகிற்கு மீட்பினைக் கொண்டு வந்தது போல, வத்திக்கான் பணியாளர்கள் ஆற்றும் மறைமுகமான பணிகள் அனைத்தும் இறையரசை இவ்வுலகம் முழுவதும் பரப்ப உதவுகின்ற மதிப்புமிக்க பணி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
குடும்பம்:
குடும்பங்கள் திருஅவையின் தொட்டில்கள் என்ற திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் அவரவர் குடும்பங்களை அன்பு செய்ய வேண்டும் என்றும், திருமணம் என்னும் வேரினால் அடித்தளமிடப்பட்டு, வாழ்வை வளப்படுத்தும் குடும்பங்கள் மிக முக்கியமானவைகள் வாழ்க்கையை வரவேற்கும் இடங்கள் என்றும் கூறினார்.
நமது கிறிஸ்தவ நம்பிக்கை பகிரப்படும் இடம் குடும்பம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், சிறுவயது முதல் எல்லா வயது வரையிலும், திருவருளடையாளங்கள், நம்பிக்கை, செபங்கள், பிறரைக் கவனித்துக் கொள்ளல், அன்பில் வளர்தல் போன்றவற்றில் நாம் வளர்வதற்கான ஓர் சமூகம் என்றும் கூறினார்.
வீட்டில் இருக்கும் முதியோர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், அவர்கள் முதியோர் இல்லத்தில் இருந்தால் அவர்களைச் சென்று சந்தியுங்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சிறு குழந்தைகளுக்கு ஒன்றாக இணைந்து செபிக்கக் கற்றுக்கொடுங்கள் என்றும், செபம் இல்லாமல் எதுவும் முன்னேறிச் செல்லாது எனவே செபியுங்கள் என்றும் வலியுறுத்தினார்.
கிறிஸ்து பிறப்பு குடில் அருகே அமர்ந்து செபிக்க மறவாதீர்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பணித்தளத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உரையாடல் வழியாக நிவர்த்தி செய்து கொள்ளப்பட வேண்டும் அதிக கூச்சலிடுவதாலோ அல்லது அமைதியாக இருப்பதாலோ அல்ல மாறாக, உரையாடல் வழியாக பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
வருகின்ற எதிர்நோக்கின் யூபிலி ஆண்டில் குடும்பங்களிலும் எதிர்நோக்கு வளரவேண்டும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்