தேடுதல்

இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை (கோப்புப் படம்) இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை (கோப்புப் படம்)   (Vatican Media)

2025 புதிய ஆண்டு அமைதி மலரும் ஆண்டாக அமையட்டும்!

அனைவரின் மீதும் இறைவன் நம்பிக்கையையும் அமைதியையும் அருள நான் வேண்டுகிறேன், ஏனெனில் இந்த யூபிலி ஆண்டு மீட்பரின் இதயத்தில் பிறந்த இரக்கத்தின் ஆண்டு! : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கடவுளின் நீதியை மீட்டெடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் பண்டைய யூத நடைமுறையில் யூபிலி விழா அமைந்தது போன்று, நமது நாளிலும், யூபிலி என்பது கடவுளின் விடுதலை நீதியை நம் உலகில் நிலைநிறுத்த நம்மைத் தூண்டும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்; உமது அமைதியை எங்களுக்கு அளித்தருளும்' என்ற தலைப்பில், வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியன்று கொண்டாடப்படவிருக்கின்ற 58-வது உலக அமைதி தினத்திற்காக வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

நான்கு முக்கிய தலைப்புகளின் கீழ் அமைதி தினத்திற்கான தனது செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை பல்வேறு காரியங்களைக் குறித்தும் அதிலும் குறிப்பாக நீதி, அமைதி குறித்தும் பல்வேறு சிந்தனைகளை வழங்கியுள்ளார்.

01. அழிந்து வரும் மனிதகுலத்தின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தல்

எதிர்நோக்கின் உணர்வில் யூபிலி ஆண்டாக, நமது விண்ணகத் தந்தையினால் நமக்களிக்கப்பட்ட இந்தப் புத்தாண்டின் விடியலில், ஒவ்வொருவருக்கும் தனது மனமார்ந்த அமைதிக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.

அதிலும் குறிப்பாக ஒதுக்கப்பட்டவர்களாகவும், கடந்த கால தவறுகளால் பாரம் சுமப்பவர்களாகவும், மற்றவர்களின் தீர்ப்பால் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தங்கள் சொந்த வாழ்க்கையின் நம்பிக்கையின் ஒரு துளியைக் கூட உணர முடியாதவர்களாகவும் வாழ்பவர்களைத் தான் நினைத்துப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இந்த ஆண்டு முழுவதும், கத்தோலிக்கத் திருஅவை யூபிலி விழாவைக் கொண்டாடுகிறது, இது இதயங்களை நம்பிக்கையுடன் நிரப்புகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, பண்டைய யூதப் பாரம்பரியத்தில் எவ்வாறு, எதற்காக, எப்படி யூபிலி விழா சிறப்பிக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டி இன்றையச் சூழலில் நீதியையும் அமைதியையும் மீட்டெடுக்க அழைப்புவிடுத்துள்ளார்.  

தற்போது நமது மனித குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் மோதல்களை மறைமுகமாக மட்டுமே தூண்டும் செயல்களில் இருந்து தொடங்கி, நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின் அழிவுக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் பொறுப்பாளராக இருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும் என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, அமைப்பு ரீதியான சவால்கள், வேறுபட்ட மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை, இவ்வாறு உருவாக்கப்பட்டு ஒன்றாக நம் உலகில் அழிவை ஏற்படுத்துகின்றன என்பதையும் மிகவும் தீர்க்கமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அநீதியின் கட்டுகளை உடைத்து, கடவுளின் நீதியைப் பறைசாற்றுவதற்காக, ஒன்றாகவும், தனிநபர்களாகவும் அழைக்கப்படுவதை உணர, துன்பப்படும் மனிதகுலத்தின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க விரும்புகிறோம் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

02. ஒரு கலாச்சார மாற்றம்: நாம் அனைவரும் கடன்பட்டவர்

யூபிலி கொண்டாட்டம், பூமியின் பொருள்கள் சில சலுகை பெற்ற சிலருக்காக மட்டுமல்ல, ஆனால் அனைவருக்கும் என்பதை நினைவூட்டுவதன் வழியாக தற்போதைய அநீதி மற்றும் சமத்துவமின்மை நிலையை எதிர்கொள்ள பல மாற்றங்களைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றியுணர்வு இல்லாமல், கடவுளின் அருள்கொடைகளை நாம் அங்கீகரிக்க முடியாது.  என்றாலும்கூட, இறைவன் தனது எல்லையற்ற இரக்கத்தில் பாவம் நிறைந்த மனிதகுலத்தை கைவிடவில்லை, மாறாக இயேசு கிறிஸ்துவின் வழியாக அனைவருக்கும் அளிக்கப்படும் மீட்பின் மன்னிப்பின் வழியாகத்  தனது வாழ்வின் அருள்கொடைகளை மீண்டும் நமக்கு உறுதிப்படுத்துகிறார் என்றும் உரைத்துள்ளார்.

இறைத்தந்தையுடனான நமது உறவை நாம் இழந்துவிட்டால், மற்றவர்களுடனான நமது உறவுகளை சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் தர்க்கத்தால் நிர்வகிக்க முடியும் என்ற மாயையை நாம் மதிக்கத் தொடங்குகிறோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

ஏழைகளின் துன்பத்திலிருந்து ஆதாயம் பெற்ற இயேசுவின் காலத்தில் இருந்த உயர்ந்தோர் குழுவினைரைப் போலவே, இன்று, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய கிராமத்திலும் உள்ளது என்றும், அனைத்துலக அமைப்பு, அது ஒன்றிப்பு மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உணர்வால் ஈர்க்கப்பட்டால் ஒழிய, அநீதிகள், ஊழலால் மோசமாகி, ஏழை நாடுகளை சிக்க வைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

கடன்பட்டவர்களைச் சுரண்டும் மனப்பான்மை தற்போதைய 'கடன் நெருக்கடியின்' சுருக்கமான விளக்கமாக செயல்படும் என்றும், இது பல நாடுகளில், எல்லாவற்றிற்கும் மேலாக உலகளாவிய தெற்கில் உள்ளது என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த யூபிலி ஆண்டின் உணர்வில், இந்த உலகின் வடக்குக்கும் தெற்கிற்கும் இடையில் நிலவும் சுற்றுச்சூழல் கடனை அங்கீகரித்து வெளிநாட்டுக் கடனை மன்னிக்க அனைத்துலகச் சமூகம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்தாகவும்,  இது ஒன்றிப்புக்கான வேண்டுகோள், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நீதிக்கான வேண்டுகோள் என்றும் தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் ஒரே இறைத்தந்தையின் பிள்ளைகள் என்பதையும், நாம் அனைவரும் அவருக்குக் கடன்பட்டிருக்கிறோம் என்பதையும், ஆனால் பகிரப்பட்ட மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்பின் உணர்வில் நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றோம் என்பதையும், பகிர்ந்து கொள்ளும் உணர்வில், இந்த நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான கலாச்சார மற்றும் கட்டமைப்பு மாற்றம் ஏற்படும் என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

03. நம்பிக்கையின் பயணம்: மூன்று முன்மொழிவுகள்

மிகவும் தேவையான இந்த மாற்றங்களை நாம் மனதில் கொண்டால், அருளின் யூபிலி ஆண்டு, கடவுளின் எல்லையற்ற இரக்கத்தின் அனுபவத்தில் பிறந்த நம்பிக்கையின் புதுப்பிக்கப்பட்ட பயணத்தில் நம் ஒவ்வொருவரையும் மாற்றி அமைக்க உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக, இந்த இரக்கத்தின் ஆண்டின் தொடக்கத்தில், ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையிலும் மனித மாண்பை மீட்டெடுக்கும் மற்றும் எதிர்நோக்கின் பயணத்தில் அவர்களை புதிதாக அமைக்க உதவும் மூன்று முன்மொழிவுகளை வழங்கியுள்ளார் திருத்தந்தை.

முதலாவதாக, வளமான நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள நாடுகளின் கடன்களை மன்னிக்க முடிந்த அனைத்தையும் செய்ய அழைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இரண்டாவதாக, கருவுற்றது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வின் மாண்பிற்கு மதிப்பளிக்கும் உறுதியான அர்ப்பணிப்பை வழங்கிட வேண்டுமென தான் கேட்டுக்கொள்வதாகவும், இதன் வழியாக, ஒவ்வொரு நபரும் தனது சொந்த வாழ்க்கையைப் போற்ற முடியும், மேலும் அனைவரும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்குமான  வளமை  மற்றும் மகிழ்ச்சியின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன்  எதிர்பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையின் கலாச்சாரத்தை வளர்க்க உதவும் ஒரு உறுதியான அடையாளத்தை, அதாவது, அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ள மரண தண்டனையை நீக்கும் ஒரு வேண்டுகோளை தான் மீண்டும் ஒருமுறை முன்மொழிய விரும்புவதாக கூறியுள்ள திருத்தந்தை, இந்த மரண தண்டனையானது வாழ்க்கையின் மீற முடியாத தன்மையை சமரசம் செய்வது மட்டுமல்லாமல், மன்னிப்பு மற்றும் மறுவாழ்வு பற்றிய ஒவ்வொரு மனித நம்பிக்கையையும் நீக்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக, போர்களால் குறிக்கப்பட்ட இந்த நேரத்தில், ஆயுத வர்த்தகத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டையாவது உலகளாவிய நிதியத்தை நிறுவி பசியை ஒழிப்போம் மற்றும் ஏழை நாடுகளில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதையும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்ட கல்வி நடவடிக்கைகளை எளிதாக்குவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

04. அமைதியின் இலக்கு

இறுதியாக, மேற்கண்ட இந்த முன்மொழிவுகளை எடுத்துக்கொண்டு எதிர்நோக்கின் பயணத்தை மேற்கொள்பவர்கள், பெரிதும் விரும்பும் அமைதியின் விடியலை நிச்சயமாகப் பார்ப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள திருத்தந்தை, 'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்' (காண்க திபா 85:10) என்ற திருப்பாடலின் இறைவார்த்தைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

நான் கடன் என்ற ஆயுதத்திலிருந்து விலகி, என் சகோதரர் சகோதரிகளில் ஒருவருக்கு எதிர்நோக்கின் பாதையை மீட்டெடுக்கும்போது, ​​இந்தப் பூமியில் கடவுளின் நீதியை மீட்டெடுக்க நான் பங்களிக்கிறேன், அந்த நபருடன், நான் அமைதியின் இலக்கை நோக்கி முன்னேறுகிறேன் என்று அர்த்தம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரும் 2025-ஆம் ஆண்டு அமைதி மலரும் ஆண்டாக அமையட்டும்!  என்று வாழ்த்தியுள்ள திருத்தந்தை, ஓர் உண்மையான மற்றும் நீடித்த அமைதி என்பது உடன்படிக்கைகள் மற்றும் மனித சமரசங்கள் பற்றிய விவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு அப்பால் செல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சில நேரங்களில், ஒரு புன்னகை, நட்பின் ஒரு சிறிய சைகை, ஒரு கனிவான தோற்றம், செவிசாய்க்கும் காது,  ஒரு நல்ல செயல் போன்றவை மிகவும் சிறப்புவாய்ந்தவை என்றும், இத்தகைய எளிய சைகைகள் வழியாகத்தான், நாம் அமைதியின் இலக்கை நோக்கி முன்னேறுகிறோம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

அமைதி என்பது போர்களின் முடிவோடு மட்டுமல்ல, ஒரு புதிய உலகின் விடியலுடனும் வருகிறது என்றும், நாம் நினைத்ததை விட வித்தியாசமானவர்கள், நெருக்கமானவர்கள் மற்றும் உடன்பிறந்த உறவு கொண்டவர்கள் என்பதை நாம் உணரும் ஒரு உலகம் அது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

நாடு மற்றும் அரசுத் தலைவர்கள், அனைத்துலக அமைப்புகளின் தலைவர்கள், பல்வேறு மதங்களின் தலைவர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் இவ்வேளையில், ‘ஆண்டவரே, உமது அமைதியை எங்களுக்கு அளித்தருளும்!’ என்பதே எனது இறைவேண்டல் என்று கூறி சிறியதொரு இறைவேண்டலையும் எழுப்பி அமைதி தினத்திற்கான தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2024, 12:20