கடவுளது அன்பின் நற்செய்தியை இளைஞர்கள் அறிவிக்க வேண்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உலகளாவிய திருஅவைக்கு இளைஞர்கள் அனைவரும் கடவுளின் அன்பின் நற்செய்தியை இன்று அறிவிக்க வேண்டும் என்றும், பகிர்தல் மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் ஒன்றுபடுதல் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 28 சனிக்கிழமை Taizé a Tallinn என்னும் ஐரோப்பிய இளைஞர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தியானது திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்நோக்கிற்கு அப்பாற்பட்ட எதிர்நோக்கு என்னும் தலைப்பில் டாலினில் உள்ள பால்டிக் கடலின் கரையில், Taizé சமூகம் நடத்தும் 47வது இளையோர் கூட்டத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், கத்தோலிக்க திருஅவையால் தொடங்கப்பட்ட சினோடல் அணுகுமுறையின் அர்த்தம் பகிர்ந்து வாழ்தல் உடன்பிறந்த உறவுடன் வாழ்தல் என்றும், இது பல்வேறு கிறிஸ்தவ மதப்பிரிவுகளைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளுடனான கிறிஸ்தவ நட்புறவில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு யூபிலியின் கருப்பொருளுக்கு ஏற்ப, ஒவ்வொருவரும் எதிர்நோக்குடன் நடக்கவேண்டும் என்றும், எதிர்நோக்கு நமது சோர்வையும் நெருக்கடியையும் கவலையையும் நீக்கி முன்னோக்கிச் செல்வதற்கான ஆற்றலைத் தருகின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
எதிர்நோக்கு கடவுளிடமிருந்து நாம் பெறும் கொடை என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், கடவுள் நமது வாழ்வின் நேரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றார், நமது பயணத்திற்கு ஒளியூட்டுகின்றார், நமது வாழ்வின் இலக்கை அடைவதற்கான வழியைக் காட்டுகின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
2018 இல் மூன்று பால்டிக் நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின்போது, தாலினில் உள்ள கார்லியின் லூத்தரன் ஆலயத்தில் இளைஞர்களைச் சந்தித்தபோது கூறிய வார்த்தைகளான, சான்றுள்ள வாழ்வை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஒன்றிணைந்து வாழ்தல், நாம் நினைப்பதையும் விரும்புவதையும் வெளிப்படுத்துதல் மிகவும் அழகானது என்பதையும் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.
நமது உலகம் கடுமையான சோதனைகளை சந்தித்து வருகிறது. பல நாடுகள் வன்முறை மற்றும் போரால் குறிக்கப்பட்டுள்ளன, பலர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளனர், இன்னும் சிலர் நமது சமூகங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தீவிர சுற்றுச்சூழல் ஆபத்துகளால் திசைதிருப்பப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், பகிர்தல் மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் ஒன்றுபடுதல் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்