ஒளியைக் கொடுக்கவும், திறந்த மனம் கொண்டவர்களாக வாழவும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
வாழ்வில் நம்மைச் சுற்றி குழப்பங்கள் முரண்பாடுகள் எற்படும்போது நாமாக ஒருசில கூடுகள் அல்லது மறைவிடங்கள் அமைத்து அதற்குள் நம்மை மறைத்துக்கொள்கின்றோம் என்றும், நாம் அனைவரும் ஒளியைக் கொடுப்பதற்காகவும், திறந்த மனம் கொண்டவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 17 செவ்வாய்க்கிழமை இத்தாலியின் ACLI di Roma எனப்படும் நிறுவனத்தினரால் நடத்தப்படும் Labor Dì எனப்படும் மூன்றாவது பயிற்சிப் பட்டறைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பிய வாழ்த்து செய்தி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகம் நமக்கு முன் அதிகப்படியான நெரிசலையும், ஏமாற்றங்களையும், நமது பங்களிப்புக்கள் பலனற்றவைகள் போன்ற தோற்றத்தையும் அளித்தாலும், உலகில் நம்முடன் புதியதும் நுழைகின்றது என்றும், எல்லாவற்றையும் நம்மால் மாற்றமுடியும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
நம் ஒவ்வொருவரின் பங்களிப்பாலும் உலகை மேம்படுத்த முடியும். ஒவ்வொன்றின் புதுமையும் அனைவரையும் பாதிக்கிறது என்றும், உலகத்தின் பணி என்பது மனித உலகத்தைச் சார்ந்துள்ளது, அதில் எல்லாரும் எல்லாருடனும் இணைந்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
எந்த வெற்றி தோல்வியையும் பொருட்படுத்தாமலிருத்தல், மற்றவர்களுடன் நேர்மையான உறவை ஏற்படுத்துவதற்கான முனைப்பு ஆகிய இரண்டையும் உறுதியாகப் பற்றிக் கொள்வது மிக முக்கியம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், இதன்வழியாக உலகில் மென்மையான புரட்சியை ஏற்படுத்துபவர்களாக நாம் இருக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்பு, நட்பு ஆகியவற்றை அடையாளப்படுத்தும் இதயமானது, பள்ளி, கல்லூரி, பணித்தளம் என எல்லா இடங்களிலும் துடிப்புடன் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், திருவிவிலியத்தின் இதயம் என்பது நமது முடிவெடுக்கும் இடங்கள் என்றும், அங்கு நமது விருப்பங்கள், கனவுகள், பிறக்கின்றன, நமது பலவீனம் சோகம், சோம்பல் ஆகியவை விரட்டப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
நமது இதயத்தைப் பாதுகாத்துக் கொள்வோம் ஏனெனில் நம் இதயத்தில் நம்பிக்கை இருந்தால் கடவுள் நமக்காக எல்லையற்ற பொறுமையுடன் காத்திருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
தீமை நம்மை அந்நியப்படுத்துகிறது, நம் கனவுகளை அணைக்கிறது, நம்மைத் தனிமைப்படுத்துகிறது மற்றும் நம்மை இழக்கச் செய்கிறது என்றும், இதயம் நட்புறவைத் தேடுகிறது, தன்னைத் தனிமைப்படுத்தாமல் சிந்திக்கிறது, இரக்கத்தால் தன்னை அரவணைக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்