தேடுதல்

ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

படைப்பு வழியாக தன்னைக் கொடையாகக் கொடுத்த கடவுள்

நோயாளர்களின் செயல்திறன், வலிமை போன்றவை நிராகரிக்கப்படுகின்றன, சில இடங்களில் நோயாளர்களே நிராகரிக்கப்படுகின்றார்கள் இது மிகவும் தீயது - திருத்தந்தை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அன்புப் படைப்பின் வழியாகவும், இயேசுவின் மனிதப் பிறப்பு வழியாகவும் கடவுள் தன்னைத்தானே முதலில் கொடையாகக் கொடுத்தார் என்றும், நம் அனைவரையும் மீட்பதற்காக தன்னை உலகிற்குக் கொடையாக, குழந்தையாக் கையளித்த, அவரது பலவீனத்திலிருந்து பலத்தையும், அழுகையிலிருந்து பாதுகாப்பையும், மென்மையிலிருந்து துணிவையும் நாம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 14 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் (இரத்தம், பிளாஸ்மா செல், நிணநீர்க்குழியங்களில் ஏற்படும்) இரத்தப்புற்றுநோய்க்கு எதிரான இத்தாலிய இயக்கத்தின் (AIL) உறுப்பினர்கள் ஏறக்குறைய 4000 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்து எதிர்காலத்தை ஒளிரச்செய்வோம் என்ற தலைப்பில் 55ஆவது ஆண்டினைக் கொண்டாடும் அவர்களது இயக்கத்திற்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மைலோமா என்பது பிளாஸ்மா செல் புற்றுநோய். Leukemia என்பது இரத்தப் புற்றுநோய், Lymphoma என்பது வெண்குருதியணுக்களில் ஒரு வகையான நிணநீர்க்குழியங்களில் இருந்து உருவாகும் இரத்தப் புற்றுநோய்களின் குழு ஆகும்.

தன்னலத்தால் அடையாளப்படுத்தப்படும் இவ்வுலகில் இரத்த சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் குடும்பத்தார்க்கு அருகாமையில் இருந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கடவுளின் மென்மை மற்றும் இரக்கத்துடன் ஆற்றும் தன்னார்வப்பணிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருகாமை, இரக்கம் மென்மை ஆகியவை கடவுளின் பண்புநலன்கள் என்று எடுத்துரைத்தார்.

ஒளிரச்செய்தல்

இரத்தம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவரின் துன்பம் அவரது குடும்பத்தையும் துயரம் மற்றும் வேதனையின் இருளில் மூழ்கடித்து தனிமையையும் தனக்குள்ளே மூடிக்கொள்ளும் சூழலையும் உருவாக்குகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தோல்வியாகவும் மறைக்கப்படவேண்டிய நீக்கப்படவேண்டிய ஒன்றாகவும் கருதப்படும் இத்தகைய சமூகநிலை மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

செயல்திட்டங்களுக்கு இடையூறாகவும், அச்சமூட்டுவதாகவும் இருக்கின்றது என்ற எண்ணத்தில் நோயாளர்களின் செயல்திறன், வலிமை போன்றவை நிராகரிக்கப்படுகின்றன என்றும், சில இடங்களில் நோயாளர்களே நிராகரிக்கப்படுகின்றார்கள் இது மிகவும் தீயது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

நோயாளர்கள், அவர்களின் வரலாறு, குடும்பம், உறவு, நட்பு, போன்றவற்றின் மையத்தில் மீண்டும் வைக்கப்படவேண்டிய அவசரத் தேவை உள்ளது என்றும், துன்பத்தின் அர்த்தத்தைக் கண்டறிந்து, “ஏன்” என்னும் பல கேள்விகளுக்கு பதில்களை வழங்குவதற்காக, நோயாளர்களை அவரது வரலாறு, உறவுகள், குடும்ப உறவுகள், நட்புகள் மற்றும் சிகிச்சை உறவுகளுடன் மீண்டும் மையத்தில் வைக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகத் தோன்றினாலும் அவர்களது துன்பங்கள், ஏன் என்ற பல்வேறு கேள்விகளுக்கு தீர்வு நிச்சயம் உண்டு என்ற பதில் அளிக்கப்பட வேண்டும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நம்பிக்கை இழந்த சூழலிலும் நட்பு, உடனிருப்பு, செவிசாய்த்தல் ஆகியவற்றுடன் ஒரு சிறிய ஒளியை, நம்பிக்கையின் சுடரைக் கொண்டுவர யாரோ ஒருவர் அவர்களுக்குத் தேவை என்றும் வலியுறுத்தினார்.

கொடை

துயரத்தில் வாடிக்கொண்டிருக்கும் நோயாளர்களுக்கு சிறிய ஒளியை பரிசாகக் கொண்டு வருபவர்கள் கொடையாளர்கள் என்றும், கொடை என்பது நிராகரிப்புக் கலாச்சாரத்திற்கு தேவையான முக்கியமான மாற்றுமருந்து என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஒவ்வொரு முறையும் நாம் கொடையளிக்கும்போது நிராகரிப்புக் கலாச்சாரம் பலவீனமாகின்றது, இல்லாமல் போகின்றது என்றும், நமது வாழ்க்கையை ஆக்கிரமிக்க விரும்பும் நுகர்வுக் கலாச்சாரம், கொடை என்னும் நல்லொழுக்கத்தால் தோற்கடிக்கப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுள் தனது அன்புப் படைப்பின் வழியாகவும், இயேசு மனிதராக பிறப்பெடுத்ததன் வழியாகவும் தன்னைத்தானே முதலில் கொடுத்தார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நம் அனைவரையும் மீட்பதற்காக தன்னை உலகிற்குக் கொடையாக, குழந்தையாகக் கையளித்த, அவரது பலவீனத்திலிருந்து பலத்தையும், அழுகையிலிருந்து பாதுகாப்பையும், மென்மையிலிருந்து துணிவையும் நாம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

சதுக்கம் அல்லது வளாகம்

எப்போதும் திறந்ததாக, ஒருவரின் சொந்த நலன்களை வளர்ப்பதற்காக மட்டும் என்றில்லாமல் அனைவரின் நலனுக்கானதாக,  நாட்டையும் நாட்டு மக்களையும் உயிர்ப்பிப்பதாக, ஒரு உறுதியான மற்றும் வெளிப்படையான அடையாளமாக ஓர் இயக்கம் இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நல்ல சமாரியன் போன்று மக்களுடன் இருந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்வதற்கு ஆர்வம் காட்டும் அவர்களின் பணியினைப் பாராட்டினார்.

தேவையிருப்பவர்களுக்கு உதவிகள் செய்வது மட்டுமல்லாமல், அறிவியல் ஆராய்ச்சியை ஆதரித்தல், சிறந்த இத்தாலிய நலவாழ்வுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அறிவை அதிகரித்தல், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபர்களின் கவனத்தை உறுதிப்படுத்துதல் போன்ற பணிகளைச்செய்யும் அவ்வியக்கத்தார் குணப்படுத்தல் மற்றும் சிகிச்சை என்னும் இரண்டு எதிர்நோக்குகளை நோயாளர்களுக்குக்  கொடுப்பவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2024, 14:46