இருளில் ஒளிவீசும் எதிர்நோக்காம் கிறிஸ்து ஆறுதல் அளிக்கட்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கிழக்கு ஜெர்மனியின் சாக்சோனி-அன்ஹால்ட் மாநிலத்தில் உள்ள மக்டேபர்க் நகரில் நடைபெற்ற கார்விபத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்காகவும் செபிப்பதாகவும், இருளில் ஒளிவீசும் எதிர்நோக்காம் கிறிஸ்துவிடம் இறந்தவர்கள் அனைவரையும் ஒப்படைத்து ஆன்மிக ஆறுதல் பெற செபிப்பதாகவும் இரங்கல் தந்திச்செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அண்மையில் ஜெர்மனியின் மக்டேபர்க் நகரில் கிறிஸ்துமஸ் வணிகச்சந்தையில் ஏற்பட்ட கார்விபத்தில் ஏறக்குறைய 5 பேர் உயிரிழந்தும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ள நிலையில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெறவேண்டி அனுப்பப்பட்ட திருத்தந்தையின் இரங்கல் தந்திச்செய்தியானது திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் அரசுத்தலைவர் FRANK-WALTER STEINMEIER அவர்களுக்கு அனுப்பப்பட்ட இரங்கல் தந்திச்செய்தியில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்காக செபிப்பதாக வெளியிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது ஆன்மிக உடனிருப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இருளில் ஒளி வீசும் நமது எதிர்நோக்காம் கிறிஸ்துவிடம் மக்களை ஒப்படைப்பதாக குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், அனைவருக்கும் தெய்வீக ஆதரவும், ஆறுதலும் கிடைக்கப்பெற மனப்பூர்வமாக செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவிலிருந்து 2006ஆம் ஆண்டு ஜெர்மனியில் குடியேறிய 50 வயது மதிக்கத்தக்க தலேப் என்பவர் வாடகைக் காரை அதிவேகமாக ஓட்டி மக்டேபர்க் வணிகச் சந்தையில் இருந்தவர்கள் மீது மோதியதாகவும் இதில் இதுவரை 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் உள்பட 4 பெண்கள் இறந்துள்ளனர் என்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதில் 40 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்