தேடுதல்

உடன்பிறந்த உணர்வு கொண்டவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்

உடன்பிறந்த உணர்வு கொண்டு உலகத்தின் எதிர்நோக்கானக் கிறிஸ்து இறைத்தந்தையால் எளிய மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட அவர் இவ்வுலகில் உள்ள நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

டிசம்பர் 31 செவ்வாய்க்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 9.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற Te Deum என்ற நன்றி திருவழிபாட்டில் பங்கேற்று மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 2024-ஆம் ஆண்டில் இறைவன் நமக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் நன்றி கூறும் விதமாக, Te Deum என்ற நன்றி திருவழிபாட்டில் திருத்தந்தை கூறிய உரைக்கருத்துக்கள் இதோ,

நன்றி கூறுவதற்கான சிறந்த நேரமும், அன்னை மரியாவை இறைவனின் தாயாகக் கொண்டாடும் மகிழ்வின் நேரமும் இது. இயேசுவின் வாழ்க்கை மறைபொருளை தனது இதயத்தில் பாதுக்காத்து வைத்திருந்தவர் மரியா. நாமும் அந்த ஒளியின் மறைபொருளை, அடையாளங்களை நமது வாழ்வில் கற்று, கடைபிடித்து வாழ கற்பிக்கின்றார்.

நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாக உடன் பிறந்தவர்களாக உணர வேண்டும் என உரோம் நகர் அனைவரையும் அழைக்கின்றது. இந்த நேரத்தில் நாம் கடவுளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் அவர் நம்மை அதிகமாக பணியாற்ற அனுமதித்துள்ளார், குறிப்பாக உடன்பிறந்த உணர்வின் எதிர்நோக்குக் கொண்டவர்களாக எல்லையற்ற உணர்வுடன் பணியாற்ற அனுமதித்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டின் மையக்கருத்தானது பல்வேறு அர்த்தங்கள் நிறைந்ததாகவும்,  முன்னோக்கு வழிகள் பலவற்றைக் கொண்டதாகவும் இருக்கின்றது. இதுவே திருப்பயணங்களின் பாதையாகவும் அமைகின்றது. எதிர்நோக்கின் சிறந்த பாதைகளில் ஒன்று உடன்பிறந்த உணர்வு. அனைவரும் உடன்பிறந்தோரே என்ற சுற்றுமடலில் வலியுறுத்தி உள்ளதும் இதுவே. ஆம் உலகின் எதிர்நோக்கு என்பது நம் உடன் பிறந்த உணர்வில் உள்ளது.

கடந்த மாதங்களில் உரோம் நகரமானது இந்த நோக்கத்திற்காக பல நகர மேம்பாட்டுச் செயல்பாட்டு திட்டங்களைச் செய்துள்ளதை நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை, சுதந்திரம், நீதி மற்றும் அமைதியை நாடுபவர்கள், எதிர்நோக்கு மற்றும் உடன்பிறந்த உணர்வின் திருப்பயணிகள் என உலகெங்கிலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், எல்லா மத நம்பிக்கையாளர்களையும் வரவேற்க உரோம் நகர் தயாராக உள்ளது.

நமது இத்தகைய வளர்ச்சி செயல்பாடுகளுக்கு ஓர் அடிப்படைத்தன்மை உள்ளதா? மனித உடன்பிறந்த உணர்வின் எதிர்நோக்கு என்பது வெறும் வார்த்தை கோசமாக மட்டும் உள்ளதா? அல்லது நீடித்த நிலையான ஒன்றை உருவாக்கக்கூடிய பாறை போன்ற அடித்தளம் உள்ளதா என்று நம்மை நாமே கேள்விக்குட்படுத்திக் கொள்வோம்.   

இக்கேள்விகளுக்கான பதிலைக் கடவுளின் தாயான மரியா இயேசுவைக் காண்பிப்பதன் வழியாக நமக்குத் தருகின்றார். ஒரு உடன்பிறந்த உணர்வின் உலகில் எதிர்நோக்கு என்பது ஒரு கருத்தியலோ, ஒரு பொருளாதார அமைப்போ, தொழில்நுட்ப முன்னேற்றமோ அல்ல. அது உடன்பிறந்த உணர்வு கொண்டு உலகத்தின் எதிர்நோக்காகக் கிறிஸ்து இருக்கின்றார். இறைத்தந்தையால் எளிய மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட அவர் இவ்வுலகில் உள்ள நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

உரோம் நகரத்தில் நிறைவேற்றப்பட்ட பணியின் முடிவுகளை நன்றியுடன் நினைக்கும் இவ்வேளையில் இப்பணிக்காக உழைத்த ஆண்கள் பெண்கள், உரோம் நகர மேயர், அனைவருக்கும் நன்றி கூறுவோம். கடவுளின் பிள்ளைகளாக இருப்பதற்குத் தடையாக இருக்கக்கூடியவற்றை நம்மிடத்திலிருந்து களைய இறைவன் அருள் புரிய நம்மை நாமே இறைத்திருவுளத்திற்கு அனுமதிப்போம். ஒவ்வொரு நாளும் நம் அயலாருக்கு ஒரு சகோதரனாகவும் சகோதரியாகவும் வாழ உறுதிகொள்வோம்.

எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நாம் வாழவும் ஒன்றிணைந்து பயணிக்கவும் அன்னை மரியா நமக்கு உதவட்டும். கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதித்து நமது பாவங்களை மன்னித்து, முன்னோக்கிச்செல்ல நமக்கு ஆற்றல் அளித்து யூபிலி ஆண்டில் நாம் ஒன்றிணைந்து பயணிக்க அருள்தரட்டும் நன்றி.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது உரையினை நிறைவு செய்ய நன்றிப்பாடலுடன் வழிபாடு இனிதே நிறைவுற்றது. வழிபாட்டின் நிறைவில் வத்திக்கான் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குடிலின் அருகில் சென்று செபித்த திருத்தந்தை அவர்கள் குடியிருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 December 2024, 19:47