சின்னஞ்சிறிய குழந்தைகளுக்காக செபிப்போம் – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
மாசில்லாக் குழந்தைகள் திருவிழாவைச் சிறப்பிக்கும் இந்நாளில், சின்னச்சிறிய குழந்தைகள் அனைவருக்காகவும் செபிப்போம் என்றும், பசி, போர், வன்முறை இவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் அனைவரும் பாதுகாக்கப்படவும் ஆதரிக்கப்படவும் இறைவனின் உதவியைக் கேட்போம் என்றும் குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 28 சனிக்கிழமை கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் எண்கிழமையன்று மாசற்றக் குழந்தைகள் திருவிழாவை திருஅவை சிறப்பிக்கும் வேளையில் ஹேஸ்டாக் மாசற்றக் குழந்தைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிறிஸ்து பிறப்புக்காலம் என்ற தலைப்பில் மற்றொரு குறுஞ்செய்தியினையும் வெளியிட்டுள்ளார்.
மாசில்லாக் குழந்தைகள் திருவிழா நாளில் சின்னச்சிறிய குழந்தைகள் அனைவருக்காகவும் செபிப்போம், பசி, போர், வன்முறை இவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் அனைவரும் பாதுகாக்கப்படவும் ஆதரிக்கப்படவும் இறைவனின் உதவியைக் கேட்போம் என்பதே திருத்தந்தையின் முதல் குறுஞ்செய்தி எடுத்துரைப்பதாகும்.
கடவுள் மனிதராக உருவெடுத்த மறைபொருளை தியானிக்கும் இந்த கிறிஸ்து பிறப்புக் காலத்தில், நம் அருகில் வாழும் தேவையிலிருப்பவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்து கிறிஸ்து பிறப்பின் மகிழ்வின் அருளினை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே திருத்தந்தையின் இரண்டாவது குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்