தேடுதல்

யூபிலி ஆண்டில், ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையைத் தருவோம்!

டிசம்பர் 24, இச்செவ்வாயன்று மாலை புனித பேதுரு பெருங்கோவிலில் புனிதக் கதவைத் திறந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2025 ஆம் ஆண்டு நம்பிக்கையின் யூபிலி ஆண்டை தொடங்கிவைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த கிறிஸ்து பிறப்பு சிறப்புத் திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 24, இரவு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த கிறிஸ்து பிறப்புச் சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை.

அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே, ஏழைகளின் வியப்பு மற்றும் வானதூதர்களின் புகழ்ச்சிக்கு மத்தியில், இந்தப் பூமியின் மீது வானம் திறக்கிறது. அவரைப்போல நம்மை மாற்றுவதற்காக கடவுள் நம்மில் ஒருவராக மாறுகிறார். நம்மை உயர்த்தி மீண்டும் தந்தையின் அரவணைப்பிற்குள் கொண்டுவர அவர் நம்மிடையே இறங்கி வந்திருக்கிறார்.

இதுவே நமது நம்பிக்கை. கடவுள் இம்மானுவேல், அவர் நம்முடன் இருக்கிறார். எல்லையற்ற பெரியவராகிய கடவுள் நமக்காகத் தன்னை சிரியவராகிக்கொண்டார். உலகின் இருளுக்கு மத்தியில் தெய்வீக ஒளி ஒளிர்ந்தது. ஒரு குழந்தையின் பணிவில் விண்ணகத்தின் மகிமை பூமியில் தோன்றியது.

நம் இதயங்கள் மாட்டுத் தொழுவத்தை ஒத்திருக்கும் நிலையிலும் கூட கடவுள் நம்மில் எழுந்ததால், எதிர்நோக்கு சாகவில்லை, அது உயிருடன் இருக்கிறது, அது என்றென்றும் நம் வாழ்க்கையைச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நம்மால் கூற முடியும்.

நம்மை புதுப்பித்துக்கொள்வோம் 

புனிதக் கதவு திறக்கப்பட்டதன் வழியாக, நாம்  புதியதொரு யூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ளோம். இதனால் இந்த அருள்தரும் புனித ஆண்டின் அறிவிப்பின் மறைபொருளுக்குள் நாம் ஒவ்வொருவரும் நுழைய முடியும் என்று நம்புகிறோம். எதிர்நோக்கின் கதவு உலகுக்குத் திறக்கப்பட்ட இரவு இது, உங்களுக்கும் எதிர்நோக்கு இருக்கிறது என்று கடவுள் நம் ஒவ்வொருவரிடமும் சொல்லும் இரவு இது.

கடவுள் வழங்கிய இந்த அருளின் கொடையைப் பெற, பெத்லகேமின் வியப்படைந்த இடையர்களுடன் நாமும் பயணிக்க அழைக்கப்பட்டுள்ளோம். வானதூதர்களின் செய்தியைக் கேட்டபிறகு, அவர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்  (லூக் 2:16) என்று நற்செய்தி கூறுகிறது.

இழந்த நம்பிக்கையை மீண்டும் கண்டுபிடிப்பதற்கும், அதை நமக்குள்ளேயே புதுப்பிப்பதற்கும், நமது காலங்கள் மற்றும் உலகத்தின் பாழடைந்த நிலையில் அதை விதைப்பதற்கும் இதுவே வழி. தாமதிக்காதீர்கள், வேகத்தை குறைக்காதீர்கள், ஆனால் நற்செய்தியால் ஈர்க்கப்பட உங்களை அனுமதியுங்கள். ஆகவே தாமதிக்காமல், நமக்காகப் பிறந்த கடவுளைக் காணச் செல்வோம்.

கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது...

கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது செயலற்ற முறையில் காத்திருக்கும் ஒரு மகிழ்ச்சியான முடிவு அல்ல; நமக்கே உரிய பழக்கவழக்கங்களில் வாழ்ந்துகொண்டு சோம்பலில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அது நம்மைக் கேட்டுக்கொள்கிறது.

புனித அகுஸ்தினார் கூறுவதுபோன்று நாம் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு அதனை மாற்றிக்கொள்ளும் மனம்வலிமையப் பெறவேண்டும். ஆகவே, கிறிஸ்தவ நம்பிக்கை, உண்மையைத் தேடும் திருப்பயணிகளாகவும், ஒருபோதும் சோர்வடையாது கனவு காண்பவர்களாகவும், அமைதியும் நீதியும் ஆட்சி செய்யும் ஒரு புதிய உலகத்திற்கான கனவுடன் இருக்குமாறும்  நம்மை அழைக்கிறது.

இடையர்களின் வாழ்விலிருந்து இவற்றை நாம் கற்றுக்கொள்வோம். அதாவது, வசதியான வாழ்வை விட்டொழித்து வசதிகளற்ற சவால்கள் நிறைத்த வாழ்வை உறுதியாகத் தேர்ந்துகொள்வோம். கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, சவால்களை சந்திக்கத் துணியாது சுயநலம் மட்டுமே கொண்டு சிந்திப்பவர்களின் சுயநலக் கணக்கீடுகளை ஒப்புக்கொள்ளவில்லை. ஏழைகளுக்கு இழைக்கப்படும் தீமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பாதவர்களின் மனநிறைவுக்கு இது ஒத்துப்போகாது. மாறாக, கிறிஸ்தவ நம்பிக்கை, முளைத்து வளரும் இறையாட்சிக்காகப் பொறுமையுடன் காத்திருக்கும்படி நம்மை அழைக்கிறது. அதே வேளையில், நம்முடைய பொறுப்பு மற்றும் இரக்கத்தின் மூலம் அந்த வாக்குறுதியை இன்று எதிர்பார்க்கும் மனவலிமையை நம்மிடமிருந்து கோருகிறது.

மேலும் கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது, இயேசுவின் சீடர்களாகிய நாம், உலகத்தின் இருளில் ஒளியின் திருப்பயணிகளாக, நம்முடைய மிகப் பெரிய எதிர்நோக்கை அவரில் மீண்டும் கண்டுபிடித்து, தாமதமின்றி அதனை எடுத்துச் செல்ல நம்மை அழைக்கிறது.

பிரியமுள்ள சகோதரர் சகோதரிகளே, இந்த யூபிலி, நமக்கு எதிர்நோக்கின் காலமாக அமைந்துள்ளது. இது கடவுளைச் சந்திப்பதில் உள்ள மகிழ்ச்சியை மீட்டெடுக்கவும், நமது ஆன்மிக வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளவும் நம்மை அழைக்கிறது.

உலகை மாற்றி அமைப்போம்

நமது அன்னை பூமிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, அநியாயக் கடன்களால் ஏழைநாடுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள், மற்றும் பழைய மற்றும் புதிய வகையான அடிமைத்தனத்தால் சிறைபிடிக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கையை அளித்து இந்த உலகையே மாற்றியமைப்பதற்கு நம்மை அழைக்கிறது இந்த யூபிலி ஆண்டு.

வாழ்க்கை காயப்பட்டு, ஏமாற்றப்பட்ட எதிர்பார்ப்புகளில், உடைந்த கனவுகளில், இதயத்தை நொறுக்கும் தோல்விகளில்; செல்ல முடியாதவர்களின் சோர்வில், தோல்வியை உணர்ந்தவர்களின் கசப்பான தனிமையில், உள்ளத்தில் செதுக்கும் துன்பத்தில்; சிறைக் கைதிகளின் நீண்ட வெறுமையான நாட்களில், ஏழைகளின் குறுகிய, குளிர் அறைகளில், போர் மற்றும் வன்முறையால் இழிவுபடுத்தப்பட்ட இடங்களில் இந்த யூபிலி ஆண்டில் எதிர்நோக்கை மீண்டும் கொண்டுவரும் கடமை நம்மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்வோம்.

நாம் ஒவ்வொருவரும் நற்செய்தியின், அன்பின், மற்றும் மன்னிப்பின் எதிர்நோக்கைப் பெறுவதற்கான அருமையானதொரு வழியை இந்த யூபிலி ஆண்டு நமக்குத் திறந்துள்ளது.

அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, இந்த இரவில், கடவுளுடைய இதயத்தின் "புனிதக் கதவு" உங்களுக்காகத் திறக்கிறது. இயேசு என்னும் இம்மானுவேல் நமக்காகவும், இவ்வுலகின் ஒவ்வொரு ஆணுக்காகவும் பெண்ணுக்காகவும் பிறந்துள்ளார். அவருடன் மகிழ்ச்சி மலர்கிறது, வாழ்க்கை மாறுகிறது, நம்பிக்கை ஏமாற்றமடையாது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 December 2024, 15:09