தேடுதல்

குவாதலூப்பில் அன்னை மரியாவின் தாய்மை வெளிப்படுத்தப்பட்டது!

வாழ்க்கையின் வெவ்வேறு கடினமான தருணங்களில், வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களில், வாழ்க்கையின் அன்றாட தருணங்களில். "அச்சம்கொள்ளாதே, இங்கே நான் உன் தாயாக இருக்கின்றேன்" என்று கூறிய அன்னை மரியாவின் சொற்களைக் கேட்பதுதான் குவாதலூப்பின் செய்தியாக அமைகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"அச்சம்கொள்ளாதே, இங்கே நான் உன் தாயாக இருக்கின்றேன்!" என்பதுதான் குவாதலூப் அன்னை மரியாவிடமிருந்து வரும் நமக்கான செய்தியாக அமைகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 12, இவ்வியாழனன்று, குவாதலூப் அன்னை மரியாவின் விழாவை முன்னிட்டு புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

குவாதலூப்பில் அன்னை மரியாவின் தாய்மை வெளிப்படுத்தப்பட்டது என்றும், எதிர்பாராதவிதமாக பல சித்தாந்தங்கள் கருத்தியல் நன்மைகளைப் பெறுவதற்காக திசைதிருப்ப விரும்பிய குவாதலூப்பின் இந்த மறைபொருள், மேலங்கி (tilma), அன்னை, ரோஜா ஆகிய மூன்று எளிமையான காரியங்களை நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று குறிப்பிட்டார் திருத்தந்தை.

அன்னை மரியாவின் தாய்மை மேலங்கியாகிய இந்த எளிய ஆடையில் பதிந்துள்ளது என்றும், Indio Juan Diego கண்டுபிடித்து கொண்டு வரும் ரோஜாக்களின் அழகில் அன்னை மரியாவின் தாய்மை காட்டப்படுகிறது; மற்றும் அவரின் தாய்மை, சமய மேல்நிலையாளர்களின் (prelates) சற்றே நம்பமுடியாத இதயங்களுக்கு நம்பிக்கையை கொண்டு வரும் அதிசயத்தை செய்கிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

குவாதலூப்பின் மறைபொருளான மேலங்கி, ரோஜா, இந்தியோ ஜூவான் தியெகோ  இதைத் தவிர மற்ற அனைத்தும் பொய் என்று கூறலாம் என்றுரைத்த திருத்தந்தை, குவாதலூப்பின் மறைபொருள் என்னவென்றால், அதை வணங்குவதும், "அச்சம்கொள்ளாதே! இங்கே நான் உன் தாயாக இருக்கின்றேன்" என்ற அன்னை மரியாவின் வார்த்தைகளை நமது காதுகளில் கேட்பதும்தான் என்றும் எடுத்துக்காட்டினார்.

வாழ்க்கையின் வெவ்வேறு கடினமான தருணங்களில், வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களில், வாழ்க்கையின் அன்றாட தருணங்களில். "அச்சம்கொள்ளாதே, இங்கே நான் உன் தாயாக இருக்கின்றேன்" என்று கூறிய அன்னை மரியாவின் சொற்களைக் கேட்பதுதான் குவாதலூப்பின் செய்தியாக அமைகிறது என்றும் மற்றவையெல்லாம் கருத்தியல் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2024, 12:59