கிறிஸ்தவத் திருப்பயணங்கள் நம்மை திருத்தூதர்களாக மாற்றுகின்றன!
செல்வராஜ் சூசைமாணிக்கம்
கரிசனையுடன் கூடிய உங்களின் நற்செய்தி அறிவிப்புப் பணியை நான் ஊக்குவிக்கிறேன் என்றும், கிறிஸ்தவத் திருப்பயணங்கள் நம்மை திருத்தூதர்களாக மாற்றும் என்று நம் பண்டையத் திருப்பயணிகள் நமக்குக் கற்பிக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 19, வியாழன் இன்று, 'புனித சந்தியாகப்பரின் வழி' (Camino de Santiago) என்ற அமைப்பைச் சார்ந்த இத்தாலியத் திருப்பயணிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறூ தெரிவித்த திருத்தந்தை, இந்தக் காத்திருப்புக் காலத்தில் (திருவருகை), பாலஸ்தீனத்தில் திருப்பயணிகளாக வாழ்ந்த திருக்குடும்பத்தினர் நம் வாழ்வின் முன்மாதிரியாகத் திகழட்டும் என்றும் மொழிந்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் புனித சந்தியாகப்பர் திருத்தலத்தை நோக்கிச் செல்லும் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப் பார்ப்பது சிறப்புக்குரியதாக இருக்கின்றது என்றும், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் மற்றும் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஆகியோரும் இந்தத் திருத்தலத்திற்கு வருகை தந்தனர் ஏனெனில் இது ஐரோப்பாவின் கிறிஸ்தவ வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றும் பெருமைபொங்கக் கூறினார் திருத்தந்தை.
இந்த எண்ணிக்கையின் அதிகரிப்பு நன்மையான குறியீடாக உள்ளது, ஆனால், புனித சந்தியாகப்பர் திருத்தலத்தை நோக்கிச் செல்லும் திருப்பயணிகளின் உண்மையில் சரியான நோக்கம் கொண்ட ஒரு திருப்பயணத்தை மேற்கொள்கிறார்களா அல்லது நோக்கமற்று செல்கிறார்களாக என்றதொரு கேள்வியை நமக்குள் எழுப்புகிறது என்றும் கூறி அவர்களைச் சிந்திக்கத்தூண்டினார் திருத்தந்தை.
ஒரு கிறிஸ்தவத் திருப்பயணம் என்பது, அமைதி, திருவிவிலியம், நெறிமுறை ஆகிய மூன்று காரியங்களால் அடையாளம் காணப்படுகிறது என்று மொழிந்த திருத்தந்தை, இம்மூன்றைக் குறித்தும் அவர்களுக்கு சிறப்பாக விளக்கிக் கூறினார்.
முதலாவதாக, அமைதி என்பது, அமைதியாக நடக்கவும், இதயத்தால் கேட்கவும், திருப்பயணத்தின் சவால்களில் பதில்களை கண்டுபிடிக்கவும் அனுமதிக்கிறது என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இரண்டாவதாக, திருவிவிலியம் என்பது, அதனை எடுத்துக்கொண்டு, தன்னையே நமக்கு முழுவதுமாகத் தந்த இயேசுவின் பயணத்தை மீள்வாசிக்க வேண்டும் என்பதையும், கிறிஸ்தவப் திருப்பயணம் என்பது தன்னலமற்ற தன்மை மற்றும் பிறருக்குப் பணியாற்றுவதன் வழியாக நம்பகத்தன்மைக் கொண்டதாக மாறுகிறது என்பதையும் உணர்ந்துபார்க்க வேண்டும் என்றும் அவர்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மூன்றாவதாக, நெறிமுறை (மத்தேயு 25) என்பது, துன்புறுத்தப்பட்டவர்கள், விழுந்தவர்கள் மற்றும் தேவையில் இருக்கும் மக்கள்மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, புனித லூயிஸ் குவனெல்லா கூறியது போல, தேவையில் இருக்கும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதை விசுவாசிகள் அனைவரும் தங்கள் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்