தேடுதல்

மன்னிப்பும் சுதந்திரமும் நமது வாழ்வின் இலக்குகளாகட்டும்!

டிசம்பர் 26, வியாழக்கிழமை இன்று, உரோமையிலுள்ள ரெபிபியாவின் சிறையில் புனிதக் கதவைத் திறந்து நிகழ்த்திய திருப்பலியில் வழங்கிய மறையுரையில் மன்னிப்பு மற்றும் சுதந்திரம் குறித்து எடுத்துரைத்து அதில் வாழும் சிறைக் கைதிகளுக்கு நம்பிக்கை ஊட்டினார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாம் எங்கிருந்தாலும், கடவுளிடமிருந்து வரும் நம்பிக்கைக்கு ஒவ்வொரு நாளும் சான்றுபகர புனித ஸ்தேவானின் பரிந்துரையை வேண்டுவோம் என்றும், இறைவனின் மன்னிப்பு அனைவருக்குமானது என்ற நம்பிக்கையுடன் நாம் இன்று திறந்திருக்கும் இந்தப் புனிதக் கதவைக் கடந்து செல்வோம் என்றும்  கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 26, வியாழக்கிழமை இன்று, உரோமையிலுள்ள ரெபிபியாவின் சிறையில் புனிதக் கதவைத் திறந்து நிகழ்த்திய திருப்பலியில் வழங்கிய மறையுரையின்போது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை புனித ஸ்தேவானின் வாழ்வை எடுத்துக்காட்டி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

நாம் இப்போது கேட்ட நற்செய்தியில், எல்லா மனிதர்களின் வரலாற்றிலும், காலத்தின் இறுதி வரை வெறுப்புக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஒரு போராட்டம் உள்ளது என்று கூறிய திருத்தந்தை, ஒருபுறம், "சகோதரர் தம் உடன் சகோதரகளைக் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள்" (மத் 10:21) என்று இயேசு வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறார் என்றும், மறுபுறம், "இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்" (மத் 10:22) என்றும், அவர் நமக்கு உறுதியளிக்கிறார் என்றும், அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை.

நம்பிக்கைக்கு எப்போதும் இடமுண்டு

வன்முறை மற்றும் தீமையின் சூழலில், உண்மையில், நம்பிக்கைக்கு எப்போதும் இறுதி இடமுள்ளது என்பதையும், இதனால்தான் நாம் துன்பத்தில் இருக்கும் நிலையிலும்கூட, இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நற்செய்தியாக அமைகின்றன என்பதையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இன்று நாம் திருவழிபாட்டில் நினைவுகூரக்கூடிய முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவான், இந்த நம்பிக்கையின் சான்றாகத் திகழ்கிறார் என்றும், தனது சகோதரர்களால், அவருடைய சொந்த மக்களால் கொல்லப்பட்டாலும், "இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று நம்பிக்கையுடன் அறிவிக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

தன்னைக் கற்கள் தாக்கும் வேளையில் பூமியை நோக்கிய தன் கண்களை மூடிக்கொள்வதால், விண்ணகத்தின் கதவு தனக்காகத் திறக்கப்படுவதை ஸ்தேவான் காண்கிறார் என்றும், மனிதர்களின் கொடுமைகள் கடவுளின் இரக்கத்தால் வெல்லப்படுகின்றன, அவர் நம்மை வரவேற்று காப்பாற்றுகிறார், எல்லா தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டெடுக்கிறார் என்றும் அவர்களுக்குக் கூறினார் திருத்தந்தை.

இன்று நாம் இந்தச் சிறையில் ஒரு புனிதக் கதவைத் திறக்கிறோம். இது யூபிலியின் கதவு, அதாவது, இது அனைத்து கிறிஸ்தவர்களையும் மகிழ்ச்சியில் இணைக்கும் ஒரு நிகழ்வு என்றும் உரைத்த திருத்தந்தை, ஒரு மூடிய இடத்தில், நம்பிக்கை ஒரு புதிய வழியைத் திறக்கிறது என்றும், அது மன்னிப்பு மற்றும் சுதந்திரத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்றும் தெரிவித்தார்.

இந்தச் சிறைச்சாலையில் நாம் திறக்கும் புனிதக் கதவு, நம் சகோதரரும் மீட்பருமான கிறிஸ்துவின் அடையாளமாகும் என்றும், அவர் நம் வாழ்க்கையை கடவுளுக்குத் திறக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, ஒன்றிணைந்து யூபிலியைத் தொடங்கும் இவ்வேளையில் ​​மன்னிப்பு மற்றும் சுதந்திரம் ஆகிய இரண்டு இலக்குகளைப் பற்றி சிந்திப்போம் என்றும் கூறி அவர்களை சிந்திக்க அழைத்தார்.

மன்னிப்பு

முதலில், மன்னிப்பு குறித்து சிந்திப்போம் என்று கூறிய திருத்தந்தை, ஸ்தேவான் கொள்ளப்படும் வேளையில் அவர் முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார் (திபா 7:60) என்று கூறிய திருத்தந்தை, இயேசு சிலுவையில் தொங்கியபோது, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (காண்க லூக் 23:34) என்று கூறிய வார்த்தைகளுக்கு புனித ஸ்தேவான் சான்று பகர்கின்றார் என்று ஒப்பிட்டுக்காட்டினார்.

சுதந்திரம்

இரண்டாவதாக, மன்னிக்கும் இந்த அன்பின் செயல் வழியாக நாம் நமது சுதந்திரத்தை மீண்டும் பெறுகிறோம் என்றும், இந்த வார்த்தை நாம் சரியானதைச் செய்வதற்கான வலிமையைக் குறிக்கிறது என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நாம் நமது நன்மைத்தனத்தில் உண்மையாக நிலைத்திருக்கும்போது நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

சொல்லப்போனால், நாம் தொடங்கியுள்ள யூபிலி ஆண்டு, நம்மை உற்சாகப்படுத்துகிறது மற்றும் வலுப்படுத்துகிறது, ஏனென்றால் ஆண்டவராகிய இயேசு நம் வாழ்வின் போராட்டங்களை அறிந்திருக்கிறார், வழியில் நம்முடன் நடந்து வருகிறார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை.

அன்பான நண்பர்களே, நாம் எங்கிருந்தாலும், கடவுளிடமிருந்து வரும் நம்பிக்கைக்கு ஒவ்வொரு நாளும் சான்றுபகர புனித ஸ்தேவானின் பரிந்துரையை வேண்டுவோம் என்றும், இறைவனின் மன்னிப்பு அனைவருக்குமானது என்ற நம்பிக்கையுடன் நாம் இன்று திறந்திருக்கும் இந்தப் புனிதக் கதவைக் கடந்து செல்வோம் என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2024, 14:45